'சத்திய சோதனை': நல்ல மனிதனாக வாழ்வதற்கு..! -இயக்குநர் வி.சேகர்

’எனது வாழ்க்கையே மக்களுக்கு நான் சொல்லும் செய்தி’ என்ற மகாத்மாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ’சத்திய சோதனை’யே என்னைக் கவர்ந்த நூல்.
'சத்திய சோதனை' / வி.சேகர்
'சத்திய சோதனை' / வி.சேகர்

’எனது வாழ்க்கையே மக்களுக்கு நான் சொல்லும் செய்தி’ என்ற மகாத்மாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ’சத்திய சோதனை’யே என்னைக் கவர்ந்த நூலாக அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.

இயல்பிலேயே எனக்குப் படிக்கும் பழக்கம் அதிகம். மாதம் 200 ரூபாய் வருமானம் இருந்த அக்காலம் முதல் இன்றுவரை அதிக நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பது புத்தகங்களுக்காகத்தான். மலேரியா ஒழிப்புப் பணியாளராகப் பணியாற்றிய காலத்திலேயே அருகிலுள்ள நூலகங்களுக்குச் சென்று படிப்பதையும், மூர்மார்க்கெட்டில் கிடைக்கும் நல்ல புத்தகங்களைப் பாதி விலைக்கு வாங்கிப் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்படி வாங்கிய புத்தகம்தான் மகாத்மா காந்தியின் ’சத்திய சோதனை’.

சில சமயம் பல சிரமங்களுக்கிடையே வாங்கும் நூல்கள் பயனளிக்காவிட்டால் மிகவும் வருத்தப்படுவேன். ஆனால், அதற்கு நேரெதிராக மிகுந்த பயனையும், ஆழமான ஒரு பதிவையும் ஏற்படுத்தியது இந்நூல். இதனை வாங்கிய புதிதில் இது ஒரு ஆன்மிக நூல் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு எனத் தெரிந்தது. படிப்பதற்கு முன்புவரை மகாத்மா காந்தியை எந்தவிதக் கெட்ட பழக்கங்களுக்கும் ஆட்படாத ஒரு அப்பழுக்கற்ற மனிதராகவே நினைத்து வந்தேன். ஆனால் அவர் அந்நூலில், தான் சிகரெட் பிடித்தது, மது அருந்தியது, குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத வேளையில் மனைவியிடம் உறவுக்கு முயன்றது எனப் பட்டியலிட்டதைப் படித்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், அவர் அப்பழக்கங்களைக் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், எவ்வாறு சுய முயற்சியால் அதிலிருந்து விடுபட முடிந்தது என்பதையும் எழுதுகிறார். இம்மாதிரியான அனுபவங்களை அவரே வெளிப்படுத்தவில்லையெனில் யாருக்குத் தெரியப் போகிறது? இதன் மூலம் மனிதன் மற்றவருக்கு உண்மையாய் இருப்பதைவிடத் தனக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என்ற வாழ்க்கை நெறிமுறையைப் படிப்பவருக்கு உணர்த்துகிறார்.

ரயிலில் பயணம் செய்தபோது வெள்ளைக்காரன் ஒருவனால் அவமானத்திற்குள்ளாகி வெளியேற்றப்பட்டபோது அதனைத் தனிமனித அவமானமாகக் கருதாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான அடக்குமுறையாக உணரந்தது, நோயால் துடிக்கும் ஆட்டைக் காணச் சகிக்காமல் அதனைக் கொன்றுவிடச் சொல்லும் மனிதநேயம், ஆடம்பரமில்லாத ஆனால் இயற்கையொடு இயைந்த அவரது எளிய வாழ்க்கை, மனித குலத்தின் கடைநிலை உயிர்களாகக் கருதப்பட்ட தாழ்த்தப்பட்டோரை ‘ஹரிஜன் – கடவுளின் குழந்தைகள்’ எனக் கூறி உயர்த்தியது. இந்து – முஸ்லீம் ஒற்றுமையைப் பேணிக் காத்தது என ஒவ்வொரு சம்பவங்களுமே அவர் மனிதனிலிருந்து மகாத்மாவாக உயர்ந்ததற்குச் சான்று.

நான் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்டாக இருந்து கொண்டு எப்படி மகாத்மாவை வியக்கிறேன் எனப் பல தோழர்கள் கேள்வியெழுப்பியதுண்டு. என்னைப் பொறுத்தவரை மார்க்சியமும் காந்தியமும் வலியுறுத்திவது மனிதநேயமும், மக்களின் உயர்வும்தான். ஆகையால் இவை ஒரே இலக்கிற்காக இரு வேறு பாதைகள்.

இம்மாதிரியான புத்தகங்களைப் படிக்கும்போது இந்த மகான்களைப் போல இல்லாவிட்டாலும், இவர்களது வாழ்க்கையின் சிறு கூறுகளையாவது பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே சினிமா போன்ற ஒரு துறையில் இருந்துகொண்டு சிகரெட், குடி, கிசுகிசு என எதிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளாதது.

சில புத்தகங்களைப் படிக்கும்போது சில விஷயங்கள், செய்திகள்தான் நமக்குக் கிடைக்கும். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் மகாத்மா ஆகமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. அதனால்தான் இந்தப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். மகாத்மா ஆவதற்காக அல்ல; நல்ல மனிதனாகத் தொடர்ந்து வாழ்வதற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com