'இந்திய தத்துவ ஞானம்': முதல் வாசிப்பின் வசீகரம்! | சா.கந்தசாமி

அறிந்ததில் எல்லாம் அறியப்படாமல் இருக்கும் மனித மனதின் மனிதனைப் பற்றி அறிந்து கொண்டதன் சாரத்தை இந்தியத் தர்க்கத்தை முன்நிறுத்திச் சொல்கிற ஒரு நூல் ’இந்திய தத்துவ ஞானம்’
'இந்திய தத்துவ ஞானம்' / சா.கந்தசாமி
'இந்திய தத்துவ ஞானம்' / சா.கந்தசாமி

வாழ்க்கை தர்க்கரீதியானது. ஒவ்வொன்றையும் பற்றிக் கேள்வி கேட்க வைப்பது. கேள்வியின் மூலமாகக் கிடைக்கும் பதிலில் திருப்தி அடைவதில்லை. மேலும், மேலும் கேள்வி கேட்டு வாழ்க்கையின் புதிர்த் தன்மையைப் புரிந்துகொள்ள முயல்வது. அந்த முயற்சி நெடுங்காலமாகத் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கேள்வியும் – அதைத் தொடர்ந்து வரும் பதிலையும் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல – பேசியும் எழுதியும் வைத்திருக்கிறார்கள். ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று சொல்லாமல் சொல்வதுதான்.

தர்க்க வாழ்க்கையின் அடிநாதமென்றால் – அதைப் பற்றி அறிந்ததைத் தன் சகோதர மனிதர்களோடு பகிர்ந்து கொள்வது வாழ்க்கையின் இன்னொரு இழையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. மனித சரித்திரம் என்று அறிந்ததில் இருக்கும் அடிநாதம் இதுதான்.

தான் அறிந்ததை – அறிந்தது என்று கொண்டதை எடுத்துச் சொல்லி, மற்றவர்களும் அதை அறிந்து தான் வாழ – வாழ்ந்து மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்ள மனிதன் பட்டிருக்கும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. அது மனித சமூகத்தின் சரித்திரத்தில் எல்லாம் மகத்தான சரித்திரம். சரித்திரம் என்று பெயர் அதற்கு இல்லாவிட்டாலும் – அதுவே மெய்யான சரித்திரம். ஞானம் கொண்ட மனிதன் மெய்ஞானம் பெற – மெய்ஞான பெற்ற – அப்படிப் பெற்றதாக மெய்யாகவே நம்பிய மகான்கள் அதை எடுத்துச் சொல்வதை வாழ்க்கையின் இலட்சியமாகவே கொண்டார்கள். அதில் சில பெயர்கள் தனித்துத் தெரிகின்றன. ஆனால் தர்க்கத்தையும் ஞானத்தையும் இணைத்து  வாழ்க்கைக்கு அர்த்தமும் பொருளும் சொன்னவர்கள் பெரும்பாலும் பெயர் இல்லாமல் இருக்கிறார்கள். அது மனிதப்பட்ட ஒரு மனிதனின் தத்துவம், தர்க்கம் என்று இல்லாமல் மானிட வர்க்கம் முழுவதையும் சார்ந்தது – அறிந்தது என்று சொல்லப்படுவதில் எல்லாம் அரிதானது என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

அரிதானது என்பதை அறிந்துகொள்ளும் விளைவின் இடர்களைக் களைந்து அறிதலை எளிதாக்கப் பெரும் முயற்சி சரித்திரம் நெடுகிலும் நிகழ்ந்து வந்திருக்கிறது. அதில் இந்தியாவில் அதிகமாக நிகழ்ந்தது. வாழ்க்கையின் அர்த்தம் – அதன் பொருள் என்ன என்பதுதான் என்று தொடங்கிய கேள்வி ஒவ்வொன்றாக மேலும் மேலும் சென்றது. அதற்கான பதில் அப்படியொன்றும் கேள்வி மாதிரி திருப்தி தரும் விதமாக இல்லையென்பது தர்க்கவியலின் இன்னொரு சரித்திரமாக இருக்கிறது. கேள்வியும் பதிலும் அதன் சுவாரசியம் இழக்கவே இல்லையென்பது தான் அதன் பிரதான அம்சம்.

புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்வியும், பதிலுமான வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து வாழ வைக்கிறது. வாழ்க்கையின் பிற அம்சம் என்பதை அகவாழ்க்கை என்பதோடு சேர்த்துவிடுகிறது. இரண்டும் சேராமல் இருக்கிறபோது போரும் அழிவும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

தத்துவத்தின் பிரதானமான இலட்சியம் தன்னை அறிந்து கொள்வதுதான். அதனைப் பற்றித்தான் அதிகமாகச் சொல்கிறது. அறிந்ததில் எல்லாம் அறியப்படாமல் இருக்கும் மனித மனதின் மனிதனைப் பற்றி அறிந்து கொண்டதன் சாரத்தை இந்தியத் தர்க்கத்தை முன்நிறுத்திச் சொல்கிற ஒரு நூல் ’இந்திய தத்துவ ஞானம்’. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை மாவட்ட மத்திய நூலகத்தில் எடுத்துப் படித்தேன். ஆசிரியர் கி.லட்சுமணன். இலங்கையைச் சேர்ந்தவர். அது இளம் வயதில் என் தந்தை படித்துக் காட்டிய இராமலிங்க சுவாமிகளின் அருட்பா, அத்தை மனப்பாடமாகப் பாடி தாயுமானவர், அருட்பாவின் பக்கத்தில் கொண்டு சென்றது.

’இந்திய தத்துவ ஞானம்’ என்று முதலில் படித்த நூலை மறுபடியும் எடுத்துப் படிக்கவே இல்லை. முதல் வாசிப்பின் வசீகரம் என் மனதில் அப்படியே இருக்கிறது. நண்பர்கள், எழுத்தாளர்களுக்குத் தத்துவம், தர்க்கம் பற்றி ஏதாவது புத்தகம் என்றால், கொஞ்சமும் தயக்கமின்றி கி.லட்சுமணன் எழுதிய ‘இந்திய தத்துவ ஞானம்’ என்பதைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அது தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல் என்பதை, பிறகு படித்த நூல் எதுவும் மாற்றிவிடவில்லை. அது சார்பு இல்லாமல் தத்துவ ஞானத்தை – தத்துவ ஞானமாகவே சொல்கிறது என்பதோடு – அறிந்தது என்பதை விட – அதிகமாக இருப்பது அறியாமல் இருப்பது என்பதை அறியும் விதமாகவும் சொல்லியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com