'கள்ளிக்காட்டு இதிகாசம்': இது பாதை அமைக்கும்! -காவ்யா சண்முகசுந்தரம்

எனக்குப் பிடித்த நாவல் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. ஒரு குறிப்பிட்ட சாதியின் கதையாக மட்டும் இல்லாமல் பேயத் தேவர் பிறசாதியினரோடு வாழ்ந்த வகையினையும் விளக்குவதாக அமைந்துள்ளது.
கள்ளிக்காட்டு இதிகாசம் / காவ்யா சண்முகசுந்தரம்
கள்ளிக்காட்டு இதிகாசம் / காவ்யா சண்முகசுந்தரம்

எழுத்து, தவம் என்றால் என்னைப் பொறுத்தவரை வாசிப்பும் ஒரு தவம் தான். நான் எட்டாவது வகுப்புப் படிக்குபோதே வடக்கன் குளத்திலுள்ள மாவட்டக் கிளை நூலகத்தில் என் தவத்தைத் தொடங்கினேன். முதலில் என்னைக் கவர்ந்தது நாவல்கள் தான். கல்கி, அகிலன், மு.வ., பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், லா.ச.ரா. என விரிந்தது என் வாசிப்பு.

நாவல் என்பது புனைவு என்ற நிலையைக் கடந்து யதார்த்தம், மாந்திரீக யதார்த்தம் என்று மாறிவரும் காலம் இது. எனினும் நாவல் எழுத்துக்களில் வட்டாரப் புனைவுகளே என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளன. எவனொருவன் தன்னையும் தன் மண்ணையும் கலந்து கதை சொல்கிறானோ அவனது எழுத்தே உண்மையானது மட்டுமன்று… உன்னதமாகவும் விளங்கும்.

வட்டார நாவல்களிலும் பலவிதம் உண்டு. இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து எழுதப்படுவன அவற்றில் ஒரு வகை. தமிழில் முதல் முயற்சி கி.ரா.வின் ’கோபல்ல கிராமம்’. இது நாயக்கர்கள் ஆந்திரத்திலிருந்து இஸ்லாமியர்களுக்குப் பயந்து இடம் பெயர்ந்த கதையைச் சொல்லும். நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ இரணியல் செட்டியார்களின் சோழநாட்டுப் புண்ணியத்தைச் சுட்டிக் காட்டும். வேணுகோபாலின் ‘நுண்வெளிக்கிரணங்கள்’ கர்நாடகத்து மக்கள் திப்பு சுல்தானிடமிருந்து தப்பித்து வந்த கதையைக் கூறும்.

இந்த வரிசையில் எனக்குப் பிடித்த நாவல் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. இது சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த நூல். மதுரை மாவட்டத்துக் கிராமம் ஒன்றின் கதை. இது போல் தேவர் சமூகத்தைப் படம் பிடித்த நாவல் வேறு எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட சாதியின் கதையாகவோ, கற்பனையாகவோ மட்டும் இல்லாமல் பேயத் தேவர் பிறசாதியினரோடு வாழ்ந்த வகையினையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

கள்ளிக்காடு மண்ணில் மட்டுமன்று. அது அங்கு வாழும் மக்களின் மனங்களில் மண்டியுள்ளது என்பது நாவலின் பக்கங்களில் பரவலாகப் பார்க்கலாம். தந்தை – மகள், தாத்தா – பேரன், கணவன் – மனைவி என்னும் உறவுகள் வறுமையின் கொடுமையால் வலிமையற்றுப் போவதையும், காதல், பாசம், நட்பு போன்ற உறவுகளும் மண்ணில் வறட்சியையும் மீறி மலர்ந்து மணம் வீசுவதையும் பார்க்கலாம்.

யதார்த்தம் முகத்தில் அறையும்படியாக இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. இது கவிஞரின் சொந்தக் கதையாகவும் சோகக் கதையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. வைகை அணை கட்டப்பட்டபோது அந்தத் தேக்கத்துக்குள் மூழ்கிப் போன ஊர்களுள் ஒன்று கவிஞரின் ஊர் என்பதும் அதை விட்டுவிட்டுக் கவிஞர் சின்னஞ்சிறு வயதில் கரையேறினார் என்பதும் அவரது வாழ்க்கையின் ஆரம்ப அத்தியாயத்தின் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த நாவலை எழுதி முடித்ததன் மூலம் இவர் இப்போதுதான் முழுமையாக வைகையை விட்டுக் கரையேறி இருப்பது தெரிகிறது.

அரசின் திட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பரிதாபக் கதைகள் இன்னும் பரவலாக வெளிவரவில்லை. ஓர் அணை கட்டப்படும் முன் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு மறுவாழ்வுக்கான மார்க்கங்களை ஏற்படுத்தாமல் போனால் அதனால் ஏற்படும் அழிவுகளுக்கு எல்லை இல்லை என்பதுதான் இக்கதை கூறும் கருத்து.

வைரமுத்து உரைநடையில் செய்த உயரிய ’தவசு’ இது. இதில் இவர் பெற்ற வரம் தமிழர் பெற்ற பேறு. தன் வட்டார மொழியை அதன் சகல பரிமாணங்களோடும் மக்கள் வாழ்வை அதன் மணத்தோடும் சடங்குகள், நம்பிக்கைகள், வாய்மொழி வழக்காறுகள் போன்றவற்றைச் சிந்தாமல் சிதறாமல் சேகரித்துச் சித்திரமாக்கியுள்ளமை சிறப்புக்குரியது. இதனை நாட்டுப்புறவியல் நாவல் என்று இனம் காணலாம்.

இனி வரும் எழுத்துக்கு இது ஒரு பாதை அமைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com