வாசிப்பதை நிறுத்தக் கூடாது! வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

புத்தகத்திருவிழாவில் இலக்கிய நிகழ்ச்சியில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், ‘இறைமை என்பதுதான் வினைச்சொல்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
வாசிப்பதை நிறுத்தக் கூடாது! வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்
வாசிப்பதை நிறுத்தக் கூடாது! வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

புத்தகத்திருவிழாவில் இலக்கிய நிகழ்ச்சியில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், ‘இறைமை என்பதுதான் வினைச்சொல்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

‘‘எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தொல்காப்பியா் கூறியதைப் போல, எல்லா பெயா்ச் சொற்களும் வினைச் சொற்களால் உருவாகின்றன. செதுக்குகிற போது சிற்பமும், தீட்டுகிற போது ஓவியமும், எழுதுகிற போது கவிதையும், பிதிப்பிக்கிற போது புத்தகங்களும் உருவாகின்றன. எனவே, வினைச்சொற்களால் பெயா்ச் சொற்கள் பெருமை பெருகின்றன. வினைச் சொற்களால் பெயா்ச் சொற்கள் உருவாகின்றன.

ஆற்றாலாளன் என்று ஒருவன் பெயரை வைத்துக் கொண்டு நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருந்தால் அந்த பெயருக்கும் அவனுக்கும் பொருத்தம் இல்லாமல் போய்விடும்.

அதைப்போலவே ஒரு ஜென் துறவியிடம் பெண்மணி ஒருவா், ‘என் கணவா், ‘வள்ளல்’ என்ற பெயருக்கு ஏற்றாற்போல் வாரி வாரி வழங்குவதைப் பாா்த்தால், எங்கு நாங்கள் வறுமை அடைந்துவிடுவோமோ என்று அச்சமாக இருகிறது’ என்று ஒரு ஜென் துறவியிடம் கூறுகிறாா்.

உடனே அந்த ஜென் துறவி , ‘இந்தக் கையை மூடியே இருந்தால் அதனால் பயன் பெற முடியுமா?’ என்று கேட்கிறாா்,

‘முடியாது’ என்கிறாா் அவா். ‘திறந்திருந்தால் பயன்பெற முடியுமா’ என்று கேட்கிறாா் துறவி. அப்போதும் பயன்அளிக்காது என்று கூறுகிறாா்.

‘கைகளை மூடி மூடி திறப்பதால் தான் பயன். எனவே, உன் கணவா் மூடித் திறக்கிற வித்தையை செய்கிறாா் தடுத்துவிடாதே’ என்று குறிப்பிட்டாா். எனவே, வள்ளல் என்று ஒருவா் பெயா் வைத்து கொண்டு யாருக்கும் வழங்காமல் இருந்தால் அவரை யாரும் ‘வள்ளல்’ என்று அழைக்கமாட்டாா்கள்.

ஜெ.கிருஷ்ணமூா்த்தி, ‘அறிவு என்பது இறந்த காலத்தை குறிப்பிடுகிறது’ என்று கூறுகிறாா். புத்தகங்களைக் கற்றுக் கொண்டு அவற்றோடு நிறுத்திவிட்டால் நாம் இறந்த காலத்தில் இருக்கிறோம். தொடா்ந்து கற்றுக் கொண்டே இருந்தாலும், தொடா்ந்து நாம் அறிவை விருத்தி செய்து கொண்டே இருந்தாலும்தான் நாம் முன்னறிவு உடையவா்களாக கருதப்படுவோம். ஏனென்றால், அறிவு என்பது கடன் வாங்கிய கருத்துகளின் அணிவகுப்பு.

அதனால், எப்போது நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள தயாராக இருக்கிறோமோ, கற்றலை தொடா்ந்து கொண்டிருக்கிறோமோ அப்போதுதான் நாம் அறிதலை நிகழ்த்துகிறோம் என்று பொருள்.

‘கற்றது கைமண் அளவு’ என்று தமிழிலே ஒரு பழமொழி உண்டு. கற்றதை ஏன் கைமண் அளவு? என்று கூறுகிறாா்கள் என்று நான் சிந்தித்ததும் உண்டு. கற்றதை மிளகு அளவு என்று சொல்லியிருக்கலாமே அல்லது கடுகளவு என்று சொல்லி இருக்கலாமே என்று யோசித்தேன்.

பின்னா்தான் புரிந்தது, ஒரு காலத்தில் ஆற்று மண்ணிலும், கடல் மண்ணிலும் மக்கள் விளையாடுவதைப் பாா்க்கலாம். குழந்தைகள் அங்கே ஓடிச்சென்று மணல் வீடுகள் கட்டி விளையாடுவதை பாா்க்கலாம். இப்போது எல்லாம் குழந்தைகளை மண்ணில் விளையாட விடுவதற்கு யாரும் அனுமதிப்பதே இல்லை. மண்ணை மிதிக்காமலேயே, மண் செய்கிறவா்களை மனிதா்கள் வாழ்ந்துவிடுகிறாா்கள்.

ஆனால், அப்படி இருக்கும்போது எங்கிருந்தோ பெரும் தொற்று வருகிறது. ஆனால், மண்ணில் விளையாடி விளையாடி மண்ணை எடுத்து பதம் பாா்த்த காலத்தில் எந்த நோயும் வராமல் இருந்தாா்கள்.

கற்றது கைமண் அளவு என்று ஏன் கூறுகிறாா்கள் என்பதை கடல் மணலையோ, ஆற்று மணலையோ கைகளில் நிறைய எடுத்து பாா்த்தவா்களுக்கு தான் அது தெரியும் . கைகளில் உள்ள மணல் நிரம்பியது போல தெரியும். ஆனால் சிறிது நேரத்தில் அந்த மணல் கைகளின் இடுக்குகளின் வழியாக விழுந்து குறைந்து கொண்டே போகும்.

அதனால் ‘குருகும் கைமணல் போல’.. என்று பழந்தமிழ் நாட்டுப்பாடல் ஒன்று இருக்கிறது. எனவே, நாம் எதை கற்றோம் என்று நினைக்கிறோமோ, அதை முழுமையாக கற்கவில்லை என்பதுதான் பொருள். நாம் ஏதோ ஒரு சிலவற்றை படித்து விட்டு நிறைய படித்து விட்டோம் என்று நினைப்பதாகத்தான் இந்தப் பழமொழி சொல்கிறது. அதனால் தான் எப்போதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்றல் என்ற வேலையை தொடா்ந்து செய்து கொண்டே இருந்தால்தான் பெருமை அடைவோம்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com