கற்பனைத் திறனை வாசிப்பு உருவாக்கும்!

தமிழ்த்திரைப்பட  இயக்குநர் செழியன் தன் வீட்டு நூலகத்தைப்  பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டவை: 
கற்பனைத் திறனை வாசிப்பு உருவாக்கும்!
கற்பனைத் திறனை வாசிப்பு உருவாக்கும்!

தமிழ்த்திரைப்பட  இயக்குநர் செழியன் தன் வீட்டு நூலகத்தைப்  பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டவை: 

""என்னுடைய  15}ஆவது வயதில்  தொடங்கியது புத்தகங்களை  சேகரிக்கும் பழக்கம்.  இதற்கு காரணம்  ஆசிரியர்களான என் பெற்றோர்தான்.  பள்ளி  புத்தகம் மட்டும் படித்தால் போதாது என்று அம்புலிமாமா, கோகுலம் போன்ற இதழ்களை வாங்கித் தருவார்கள். அவைதான் நான் முதன்முதலில்  சேகரிக்கத் தொடங்கிய புத்தகங்கள்.  பின்னர், நூலகத்திற்கு  அழைத்துச் சென்று  அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.  அதுமுதல்  எனக்கு வாசிப்புப் பழக்கம் தொடங்கியது.  பின்னர், எங்கள் பகுதியில் உள்ள அன்னம்  பதிப்பகத்தை அறிமுகம் செய்தார்கள். அந்த பதிப்பகத்தில்  நூலகமும் இருக்கும்.  அங்கும் சென்று புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். பின்னர்,  சிவகங்கையில் ஒரு பழமையான மிக அழகான  நூலகம் இருக்கும். அந்த நூலகத்திற்குள்  சென்றால், புத்தகத் தெருவுக்குள் நுழைந்த ஓர் உணர்வு இருக்கும். அந்த அளவிற்கு  அந்த நூலகத்தில்   புத்தகங்களை மிக நேர்த்தியாக அடுக்கி வைத்திருப்பார்கள்.  அதைப்பார்க்கும்போதே படிக்க தூண்டும்.

அந்த வயதில்  நூலகத்திற்கு செல்லும்போது  ஒரு நாவலை எடுத்துப் படிக்கிறேன் என்றால் ஒரு நாளில்  அதை முடிக்க முடியாது.  மீதம் உள்ளதை மறுநாள்  வந்துதான் படிக்கவேண்டும்.   சில நேரங்களில்  மறுநாள்  படிப்பதற்காக  வந்தால்,  அந்த புத்தகம் அங்கிருக்காது. அதனால்,  நான் என்ன செய்வேன் என்றால், எந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கிறேனோ அதை வேறு ஓர் அலமாரியில் ஒளித்து வைத்துவிட்டு வந்துவிடுவேன்.  மறுநாள்  சென்று  அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன்.  இப்போது நினைத்தால்  அது எனக்கு சிரிப்பாக இருக்கிறது. 

 சரித்திரக் கதைகள், நீதிக் கதைகள் போன்றவற்றைத்தான் முதலில் படிக்கத்தொடங்கினேன். பின்னர், மெல்ல மொழிப் பெயர்ப்பு  கதைகள் மீது ஆர்வம் வந்தது.  பின்னர்,  ரஷ்யன்  இலக்கியம் படிக்கத் தொடங்கினேன்.   
என்னுடைய  நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள்  இருக்கின்றன என்று இதுவரை எண்ணிக்கை எடுத்ததில்லை.  சுமார் 5000 புத்தகங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.  நான் தேடிச் சென்று வாங்கிய புத்தகங்களைவிட  நண்பர்கள் மூலம் என்னைத்தேடி வரும் புத்தகங்கள்தாம் அதிகம்.  இதனால்,  படிக்க படிக்கத் தீராமல்  வளர்ந்து கொண்டே இருக்கிறது.  இப்போதும், 50}க்கும் மேற்பட்ட  முக்கியமான புத்தகங்களை படிக்க முடியாமல் வைத்திருக்கிறேன். 

பல்வேறு மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள புத்தக வாசிப்பு  மிக  முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.  ஒரு ரஷ்யன் நாவலில் அந்த நகரத்தின் தோற்றத்தைப் பற்றி, பனிப் பொழிவு , நீளமான கட்டடங்கள்,  நீளமான தெருக்கள் என்று  விவரித்திருக்கிறார்கள் என்றால், அதை நாம் படிக்கும்போது, அந்த நகரத்தை நாம் பார்த்தது இல்லை என்றாலும், அந்த நகரத்தைப்பற்றிய கற்பனை நமக்குள் உருவாகும். அதுபோல  அந்த கதாபாத்திரங்களை பற்றிய விவரிப்பும் நமக்குள் ஓர் அனுமானத்தை உருவாக்கும். இவற்றை எல்லாம் வாசிப்பின் மூலமே  உணர முடியும். 

எனக்கும் சென்னை புத்தகத்திருவிழாவுக்கும்  நீண்டகால பந்தம் உண்டு.  நான் சென்னைக்கு வருவதற்கு முன்பில் இருந்தே  அன்னம் பதிப்பகத்தார் வரும்போது அவர்களுடன் நானும்  வருவேன்.  எனவே,  ஒரு வாசகனுக்கும், எழுத்தாளருக்கும் ஆண்டுதோறும் மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கலாசார  நிகழ்வாகத் தான் இதைப் பார்க்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com