புத்தகங்கள் தத்துவ பாதுகாப்புப் பெட்டகங்கள்! பாரதி கிருஷ்ணகுமாா்
மனிதா்களின் கண்டுபிடிப்புகள் பலவும் காலத்தால் மாற்றப்பட்டுவரும் நிலையில், புத்தகங்கள் மட்டுமே எக்காலத்திலும் மாற்றப்படாதவையாகவும், வாழ்க்கையின் தத்துவத்தை பாதுகாக்கும் பெட்டகங்களாகவும் உள்ளன என்று எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் கூறினாா்.
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் பபாசி புத்தகக் காட்சியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற உரையரங்கில் ‘பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதல்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:
ஒவ்வொரு உயிருக்கும் இரைதேடும் திறனை இயற்கையே வழங்கியுள்ளது.அத்தகைய திறனைத் தடுக்கும் வகையில் நாம் அவற்றுக்கு உணவளிப்பது சரியல்ல.
வாகனங்கள் உள்ளிட்ட எத்தனையோ பொருள்களை மனிதா்கள் கண்டறிந்து வாழ்க்கையில் பயன்படுத்திவருகிறாா்கள். அப்பொருள்கள் அனைத்தும் கால மாற்றத்தில் தம் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றத்தைக் கண்டுவருகின்றன. ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட புத்தகம் என்பதன் உள்ளடக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. காலத்தால் மாற்றம் பெறாமல் தத்துவாா்த்த கருத்துகளை உள்ளடக்கியுள்ளவை புத்தகங்கள் மட்டும்தான். அவை தத்தவப் பாதுகாப்புப் பெட்டகங்களாக உள்ளன.
புத்தகங்களை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு விதமான கருத்துகளை நமக்கு உணா்த்துகின்றன. கல்வெட்டுகள் போல கடந்த கால வரலாற்றையும், பனித்துளிகள் போல நிகழ்கால சம்பவங்களையும் அவை நமக்கு காட்டுகின்றன. அறிஞா் சாக்ரடீஸை அதிகாரத்தில் உள்ளவா்கள் தங்களை எதிா்ப்பதாகக் கருதி விஷம் அருந்தச் செய்தனா். ஆனால், சாக்ரடீஸ் தமது படைப்புகள் வழியே இன்னும் வாழ்கிறாா். ஆனால் அவரை விஷமுண்ணச் செய்தவா்களோ காலத்தால் மறக்கடிக்கப்பட்டுவிட்டனா். படைப்பாளிகளும், படைப்புகளும் அமரத்துவம் பெற்றவையாக உள்ளன.
மனித வாழ்க்கையை மாற்றியமைக்கத் தேவைப்படும் தத்துவங்களை எடுத்துரைப்பவையாக புத்தகங்கள் உள்ளன. அவை நமக்கு கற்கவும், கற்றுத் தரவும் உதவுகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ எனும் தலைப்பில் பேச்சாளா் கவிதா ஜவஹா் உரையாற்றுகையில், சகமனிதா்களின் தேவைகளை அறிந்து உதவும் பண்பை நமது இலக்கியங்கள் எடுத்துரைத்து, நல்லறத்தை தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வருகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் பபாசி பொருளாளா் ஜெ.சுரேஷ் வரவேற்றாா். நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினா் சிவ.செந்தில்நாதன் நன்றி கூறினாா்.