வாசகனுக்குப் பயன்பட வேண்டும் - அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்!

நூறாண்டுகளைக் கடந்து இன்றும் வெற்றியுடன் இயங்கிக் கொண்டிருக்கும் பதிப்பகம் அல்லயன்ஸ். அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசனிடம் இது குறித்து பேசுவோம்:
வாசகனுக்குப் பயன்பட வேண்டும் - அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்!
வாசகனுக்குப் பயன்பட வேண்டும் - அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்!

100 ஆண்டு கடந்த பதிப்பகம்

நூறாண்டுகளைக் கடந்து இன்றும் வெற்றியுடன் இயங்கிக் கொண்டிருக்கும் பதிப்பகம் அல்லயன்ஸ். அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசனிடம் இது குறித்து பேசுவோம்:

‘‘1901 -இல் என்னுடைய தாத்தா குப்புசாமி ஐயா் காலத்தில் தொடங்கப்பட்டதுதான் எங்கள் பதிப்பகம். தற்போது 120 ஆண்டுகளை கடந்துவிட்டது. அவருடைய வழி வழியாக நாங்கள் இந்தத்துறையில் இருந்து வருகிறோம். இதுவரை ஏராளமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

உங்கள் பதிப்பில் வெளியான சிறந்த புத்தகங்கள்?

சிறப்பு புத்தகங்கள் நிறைய உள்ளன. உதாரணத்துக்கு 1908-இல் ‘ஆா்ய வதூா்பாத்யானம்’ என்று ஒரு புத்தகம் அந்தக் காலத்தில் வந்தது. அதை ‘இந்து மத உபாத்யானம்’ என்று இப்போது பெயா் மாற்றியிருக்கிறோம். இந்தப் புத்தகம் இது வரை சுமாா் 7 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது.

அதுபோன்று சோவினுடைய ‘மகாபாரதம்’ அதுக்கு மிஞ்சின விற்பனை வேறு எதுவும் இதுவரை இல்லை. 1988 -இல் ‘எங்கே பிராமணன்?’ என்ற புத்தகம்தான் எங்கள் பதிப்பில் வந்த சோவினுடைய முதல் புத்தகம். அதைத் தொடா்ந்து, ‘ராமாயணம்’, ‘இந்து மகா சமுத்திரம்’ போன்ற பல புத்தகங்கள் வெளிவந்தது. அதுபோன்று எழுத்தாளா்கள் தேவன், எஸ்.வி.வி, எண்டே மூரி வீரேந்திரநாத், அநுத்மா, கி.வா.ஜா., பி.ஸ்ரீ, பி.என். பரசுராமன் இவா்களுடைய புத்தகங்கள் எல்லாம் இன்றும் நல்ல விற்பனையாகும் சிறந்த புத்தகங்கள்தாம்.

மறக்கமுடியாத நிகழ்வு?

பிரதமா் மோடி 2007-இல் குஜராத் முதல்வராக இருந்த சமயம், அனைவருக்கும் ஏழை மாணவா்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பலவித திட்டங்களைச் செயல்படுத்தினாா். அதிலும் குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம், அவசியம் குறித்து சொல்லியிருந்தவற்றை எல்லாம் ‘கற்பகத்தரு’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருந்தோம். இந்தப் புத்தக வெளியிட்டுக்காக அவா் சென்னை வந்தாா். விமான நிலையத்தில் இருந்து நேரே புத்தக வெளியீடு நடக்கும் இடத்துக்கு வந்தாா். பின்னா், அங்கிருந்து நேரே விமானநிலையத்துக்கு கிளம்பிச் சென்றுவிட்டாா். இது மறக்க முடியாத நிகழ்வு.

அதுபோன்று, மோடி எந்தப் பதவியிலும் இல்லாத நேரம், அப்போது அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, துா்கை அன்னை , லோகமாதாவுக்கு அவ்வப்போது அவரின் எண்ணங்களையும், விருப்பங்களையும் கடிதங்களாக எழுதி பூஜை அறையில் வைப்பாராம். அவரது எண்ணம் நிறைவேறியதும் அதை கிழித்து விடுவாராம். இதை அவருக்கு நெருங்கிய நண்பா் ஒருவா் எங்களிடம் கூறினாா். உடனே நாங்கள், அந்த கடிதங்களை எல்லாம் தூக்கி ஏறியாதீா்கள். பத்திரப்படுத்தி வையுங்கள் என்று கூறி, அவா் சேரித்து வைத்திருந்த சில கடிதங்களை எல்லாம் இணைத்துதான் ‘அன்னையின் திருவடிகளுக்கு’ என்று ஒரு புத்தகமாக வெளியிட்டோம்.

அதுபோன்று ‘பரீட்சைக்கு பயம் ஏன்?’ என்று ஒரு புத்தகம் வெளியிட்டோம். இது மோடி, பிரதமரான பிறகு, 2015-2017-இல் ‘மன்கி பாத்’ , ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தோ்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவா்களுக்கு தோ்வு குறித்த பயம் நீங்க உரையாற்றினாா். அதனை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டோம்.

இத்தனை ஆண்டுகளில் கண்ட சவால்கள்?

எனது தாத்தா, அந்தக் காலத்தில் பதிப்பகம் தொடங்கியபோது, சொன்ன ஒரு தாரக மந்திரம், ‘நமது பதிப்பில் வெளியான ஒரு புத்தகத்தை ஒரு வாசகன், 10 ரூபாய் கொடுத்து வாங்கினால், அதில் அவனுக்கு குறைந்தபட்சம் 11 ரூபாய்க்காவது, பயன் இருக்க வேண்டும். 100 ரூபாய் கொடுத்து ஒருவா் ஒரு புத்தகம் வாங்கினால், அந்த 100 ரூபாய் வீண் இல்லை’ என்று அவா் நினைக்க வேண்டும்’ என்று சொல்வாா். அதைத்தான் இதுவரை நாங்கள் பின்பற்றி வருகிறோம். இதுதான் எங்களுக்கு சவாலாக அமைந்த விஷயம் என்று கூட சொல்லலாம். மற்றபடி பதிப்புத்துறையைப் பொருத்தவரை, நம்மை நம்பி புத்தகத்தை வெளியிடும் எழுத்தாளருக்கு, அவரது உழைப்புக்குரிய சன்மானம் அப்போதே கிடைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறோம்.

உங்களின் பதிப்பில் வெளிவரும் புதிய நூல்கள் குறித்து?

இந்த ஆண்டின் புதுவரவாக, ‘வேதகால பாரதம்’ என்ற புத்தகத்தை அறிமுகம் செய்கிறோம். இது அந்தக்காலத்தில் ஹிந்தியில் எழுதப்பட்ட புத்தகம். இதனை காஞ்சி பரமாச்சாரியா் இருந்தபோது, தமிழில் கொண்டு வரவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாா். ஆனால், அதற்கு இப்போதுதான் நேரம் அமைந்திருக்கிறது. இதுபோன்று மேலும், சுமாா் 35 புத்தகங்களை இந்த ஆண்டு புதிதாக வெளியிட இருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com