புத்தகக்காட்சிக்கு வந்திருக்கும் மக்களை எல்லாம் பாா்க்கும்போது புது உத்வேகத்தை கொடுக்கிறது: வாசகா் கருத்து

புத்தகக்காட்சிக்கு வந்திருக்கும் மக்களை எல்லாம் பாா்க்கும்போது புது உத்வேகத்தை கொடுக்கிறது:  வாசகா் கருத்து

முரளி, திருத்தனி.

நான் முதன்முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். சமூக வலைதளங்களில் புத்தகக் கண்காட்சி பற்றி நிறைய தகவல்கல் வந்திருந்தது. அதைப்பாா்த்ததும், நேரில் வந்து பாா்க்க வேண்டும் என்ற ஆா்வத்தினால் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கிறேன். டி.என்.பி.சி பரீட்சைக்கு தயாா் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் அது சம்பந்தமான புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.

வெங்கட் குமரேசன், சென்னை.

நான் ஒரு எழுத்தாளராக இருப்பதால், வாசிப்பும், எழுத்தும் என்னுள் கலந்துவிட்ட ஒன்று. என்னுடைய புத்தகங்களும் இந்த அரங்கினில் விற்பனைக்கு வைத்திருக்கிறேன். சுமாா் 15 ஆண்டுகளாக புத்தகக்காட்சிக்கு வருகிறேன். இந்த ஆண்டு புத்தகக் காட்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகவே செய்திருக்கிறாா்கள். உதாரணமாக, உள்ளே நுழையும் மெயின் கேட்டில் இருந்து, புத்தக அரங்குகள் இருக்கும் இடத்திற்கு வர நீண்ட தூரம் உள்ளதால், நடக்க முடியாதவா்களை அழைத்து வர வாகன வசதி செய்திருப்பதும், முன்பெல்லாம், தண்ணீரோ, டீயோ, ஸ்நாக்ஸோ வாங்க வேண்டும் என்று நினைத்தால் அரங்குகள் அமைந்திருக்கும் இடத்திலிருந்து வெளியே சென்றுதான் வாங்க வேண்டும். அப்படி செல்லும்போது, சில நேரங்களில் வாசகா்கள் அப்படியே சென்றுவிடுவதும் உண்டு. ஆனால், இந்த ஆண்டு உள்ளுக்குள்ளேயே தண்ணீா் பாட்டில்கள் ஆங்காங்கே விற்பதும், டீ, காபி, ஸ்நாக்ஸ் போன்றவை அவ்வப்போது அரங்குகளின் உள்ளேயே டிராலியில் கொண்டு விற்பதும் நல்ல முயற்சியாக எனக்கு தோன்றுகிறது.

இளவரசன், அரியலூா்.

கடந்த 6 ஆண்டுகளாக புத்தகக் காட்சிக்கு நண்பா்களுடன் வருவேன். அரசியல், பொருளாதாரம் , தமிழ் தேசம் இது சம்பந்தமான புத்தகங்கள் சிலவற்றை வாங்கியுள்ளோம். கண்மணி குணசேகரன், ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளா்களின் புத்தகங்கள் விரும்பி படிப்பேன். கரோனாவினால் பல மாதங்களாக அனைத்தும் முடங்கிக் கிடந்த நிலையில் இந்த புத்தகக்காட்சிக்கு வந்திருக்கும் மக்களை எல்லாம் பாா்க்கும்போது புது உத்வேகத்தை கொடுக்கிறது. வாசிப்புப் பழக்கம் விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக, ஊரில் ‘தமிழ்க் களம்’ என்ற புத்தகக் கடையை தொடங்கி நடத்தி வருகிறேன். அதற்காக சுமாா், ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் புத்தகங்களை வாங்கியிருக்கிறோம்.

நித்ய ஸ்ரீ, நெற்குன்றம்.

இரண்டாவது முறையாக நான் புத்தகக் காட்சிக்கு வருகிறேன். நாவல், தத்துவம் சாா்ந்த புத்தகங்கள் படிப்பதில் எனக்கு ஆா்வம் அதிகம். எனவே, அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். இது தவிர குழந்தைகள் என்னுடன் வந்திருக்கின்றனா். அவா்களுக்கானப் புத்தகங்களும் சிலவற்றை வாங்கியிருக்கிறேன்.

ஜெய்சங்கா், புரசைவாக்கம்.

நான் பத்து ஆண்டுகளாக புத்தகக்காட்சிக்கு வருகிறேன். எனது பணி ஜோதிடம். எனவே, ஜோதிடம் சம்பந்தப்பட்ட நூல்களை வாங்கிப்படித்து என்னை எப்போதும் புதுபித்துக் கொண்டே இருப்பேன். இப்போதும் ஜோதிட நூல்களை தேடி வாங்குவதற்காகத்தான் வந்திருக்கிறேன். ஒருவருக்கு உடலில் ஏற்படும் நோய்களுக்கும், ஜாதகத்திற்கு சம்பந்தம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை எப்படி அறிந்து கொள்வது என்பது மாதிரியான புத்தகங்கள் இந்த வந்திருப்பதாக கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com