மும்பை, டிச.18: தவறு செய்பவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார் என்றாலும், கோவிலுக்குச் சொந்தமான நகைகளையும், பணத்தையும் மனிதர்கள் காப்பாற்றத்தான் வேண்டியுள்ளது. அசாதாரண சூழலில் கோவில் சொத்து வீணாகிவிடக்கூடாது என்பதற்காக காப்பீடு செய்யும் முயற்சியில் பெரும்பாலான கோவில்கள் இறங்கியுள்ளன. ஆனால் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களை காப்பீடு செய்ய எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
கோவில் அர்ச்சகர்கள், யாத்திரீகர்கள், கோவில் நகைகள்,கோவில் யானைகள், கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை காப்பீடு செய்ய அதிக வருமானம் ஈட்டும் கோவில்கள் தயாராக உள்ளன.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள வேங்கடேச பெருமாள்தான் உலகிலேயே மிகவும் பணக்கார கடவுள் என கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு மட்டும் 8,000 கி.கி. தங்க நகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் விலை மதிக்க முடியாத வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதால் இவற்றின் மதிப்பை கணிப்பது சிரமமாகும். மேலும் இவற்றில் சில 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றின் மதிப்பு மட்டும் ரூ. 52 ஆயிரம் கோடியாகும்.
கோவில் சொத்துகளைக் காப்பீடு செய்ய அறங்காவலர் குழு தயாராக இருந்தபோதிலும், பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் இதில் தயக்கம் காட்டுகின்றன. இழப்பீடு கோரினால் மிக அதிக அளவில் அளிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே பெரும்பாலான நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக காப்பீட்டுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இங்குள்ள நகைகளில் சில 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவற்றை மதிப்பீடு செய்வதும் மிகப் பெரும் சவாலான விஷயம் என்று யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி. ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஒரே நிறுவனமே அதிக மதிப்புள்ள தொகையை காப்பீடு செய்ய முடியாது. இதில் உள்ள சாதக, பாதக அம்சங்களைக் கருத்தில் கொண்டு வேறு நிறுவனத்திடம் இதை மறு காப்பீடு செய்ய வேண்டும். அப்போதுதான் இழப்பீடு கோரினால் அதை அளிக்கும்போது பெருமளவு நஷ்டம் ஏற்படாது.
இருப்பினும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நகைகளுக்கு பகுதியளவில் யுனைடெட் இந்தியா நிறுவனம் காப்பீடு அளித்துள்ளது. சில முக்கிய விசேஷங்களுக்கு கடவுள் நகைகளை எடுத்துச் செல்லும்போது இந்த காப்பீடு அளிக்கப்படும். அதுவும் 7 கி.மீ. சுற்றுவட்டாரத்திற்கள் எடுத்துச் சென்றால் மட்டுமே இந்த காப்பீடு செல்லுபடியாகும். 400 கி.கி. தங்க நகை, வங்கியில் உள்ள ரூ. 400 கோடிக்கு இத்தகைய காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
குருவாயூர் ஆலயம் ஆண்டுதோறும் ரூ. 50 லட்சத்தை காப்பீட்டு தொகை வழங்குகிறது. இந்த ஆலயம் ஒருங்கிணைந்த காப்பீடு செய்துள்ளது. கட்டடம், நகை, பசுக்கள், யானைகள் ஆகியன இதில் அடங்கும்.
இதேபோல சபரிமலை ஆலயமமும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் தங்கத் தகட்டால் வேயப்பட்ட மேற்கூரை, யுனைடெட் இந்தியா நிறுவனத்திடம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சபரிமலை பக்தர்கள், பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் காப்பீடு வழங்குகிறது. சராசரியாக 4 கோடி மக்கள் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையான காலத்தில் சபரிமலைக்கு வருகின்றனர். இதனால் ஆலயத்துக்குக் கிடைக்கும் வருமானம் ரூ. 150 கோடியாகும்.
2002-ம் ஆண்டு ஆமதாபாதில் உள்ள அக்ஷர்தாம் ஆலயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதன்பின்னர் ஆலயத்தைக் காப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. பயங்கரவாத தாக்குதலுக்காக ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயம், திருப்பதி ஆலயம், மதுரை மீனாட்சி ஆலயம் ஆகியன காப்பீடு செய்துள்ளன.
இப்போது புதிதாகக் கட்டப்படும் ஆலயங்கள் அனைத்தும் காப்பீடு செய்யப்படுகின்றன. இதேபோல பழமையான கோவில்களும் காப்பீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றன.
சமீபத்தில் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களைக் காப்பீடு செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இதனால் காப்பீட்டு நிறுவனங்களுக்குத்தான் இழப்பு ஏற்பட்டது. அத்துடன் எத்தனை பக்தர்கள் வந்தனர் என்ற விவரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அதிகபட்சம் 500 பக்தகர்கள் வரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தால் தலா ரூ. 1 லட்சம் வழங்க காப்பீடு செய்யப்பட்டது. யாத்ரீகர்களுக்கான பிரத்யேக காப்பீடும் இப்போது அதிக அளவில் பிரபலமாகியுள்ளது.
கோவில்களைக் காப்பீடு செய்வதன் மூலம் தங்கள் நிறுவனத்துக்கு மிகச் சிறந்த விளம்பரம் கிடைப்பதாகவும் காப்பீட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.