கோவை, ஜூலை 14: நூல் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளன.
தென்னிந்திய சிறுநூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட சிறுநூற்பாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
நூல் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், உற்பத்தியைத் தொடருவது ஆலைகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தியுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
பஞ்சு மற்றும் பருத்தி நூல் மீதான மத்திய அரசின் கொள்கை முடிவுகள் உள்நாட்டு ஜவுளித்துறைக்கு பாதகமாக இருந்து வருகிறது. பருத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்ததற்கும், நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததற்கும் மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
உற்பத்தியைக் குறைப்பதன் மூலமாக நூல் விலை வீழ்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதால் சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் என்ற முடிவை எடுத்துள்ளன.
இதுகுறித்து சிஸ்பா தலைவர் எஸ்.வி.தேவராஜன் கூறியது:
கடந்த மார்ச்-ல் ரூ.250 ஆக இருந்த 40 கவுண்ட் நூல், தற்போது ரூ.150 ஆகக் குறைந்துவிட்டது. 60 கவுண்ட் நூல் ரூ.280-லிருந்து ரூ.180 ஆகிவிட்டது. இதேநிலை தொடர்ந்தால் நூற்பாலைகளை இயக்க முடியாது.
ஏற்கெனவே பெரிய ஆலைகள் ஒரு ஷிப்ட் உற்பத்தியை நிறுத்திவிட்டன. சிறுநூற்பாலைகளிலும் 40-லிருந்து 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. நூல் விலை வீழ்ச்சி தொடருவதால் தமிழகம் முழுவதும் சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் ஏற்கெனவே பெரும்பாலான ஆலைகளில் 75 நாள் உற்பத்திக்கான நூல்கள் தேக்கமடைந்துள்ளன. இச்சூழலில் மேலும் உற்பத்தியைத் தொடருவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
தற்போது 10 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்துள்ளோம். இதனால் தொழிலாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பு இல்லை. அவர்களுக்கு உற்பத்தி இல்லாத மாற்று வேலைகளைக் கொடுத்துள்ளோம் என்றார்.