பெய்ஜிங், ஜூலை 30: அதிகரித்துவரும் ஊழியர் சம்பளத்தைக் கட்டுப்படுத்த 10 லட்சம் ரோபோக்களைப் பயன்படுத்த தைவான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீனாவில் செயல்படும் தைவான் நிறுவனமான ஃபாக்ஸ்கான் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் கம்ப்யூட்டர் சார்ந்த பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ஆப்பிள், சோனி, நோக்கியா உள்ளிட்ட மின்னணு நிறுவனங்களுக்கு தேவையான கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை தயாரித்து அளிக்கிறது.
இந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலை சீனாவில் செயல்படுகிறது. இந்த ஆலையில் 12 லட்சம் பேர் பணி புரிகின்றனர். கடந்த ஆண்டு வேலைப் பளு காரணமாக பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இது நிறுவனத்தின் மதிப்பை சர்வதேச அளவில் வெகுவாக பாதித்தது. இதிலிருந்து மீள நிறுவனம் புதிய உத்தியைக் கையாள முடிவு செய்துள்ளது.
இதன்படி நிறுவனத்தில் பெரும்பாலான பணிகளுக்கு ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. ஸ்பிரே செய்வது, வெல்டிங் மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்நிறுவனத்தில் 10 ஆயிரம் ரோபோக்கள் உள்ளன. அடுத்த ஓராண்டுக்குள் இதை 3 லட்சமாகவும் மூன்றாண்டுகளில் 10 லட்சமாகவும் உயர்த்த ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது.