மும்பை, பிப்.11: பங்குச் சந்தையில் தொடர்ந்து 6-வது வாரமாக ஏறுமுகம் காணப்பட்டது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் வாங்கியதால் 144 புள்ளிகள் உயர்ந்தன. அன்னிய முதலீடுகள் அதிகரித்ததும் பங்குச் சந்தை குறியீட்டெண் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
கடந்த வாரத்தில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 3,893 கோடி முதலீடு செய்துள்ளன.
கட்டுமானம், நுகர்வோர் பொருள் தயாரிப்பு, உலோகம், வங்கித் துறை, தகவல்தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 17,748 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 55 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 5,381 புள்ளிகளாக இருந்தது.
கடந்த வாரம் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக சரிந்தது மற்றும் தொழில்துறை உற்பத்தி சரிந்தது ஆகியன பங்குச் சந்தையைப் பாதிக்கும் காரணிகளாக இருந்தன. முக்கியமான 30 துறைகளில் 21 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின.
கடந்த வாரம் ஜின்டால் ஸ்டீல் 8.53%, பஜாஜ் ஆட்டோ 7.83%, டிசிஎஸ் 5.34%, விப்ரோ 5.18%, ஸ்டெர்லைட் 5.13%, டாடா மோட்டார்ஸ் 3.69%, எஸ்பிஐ 3.30%, என்டிபிசி 2.01%, ஹெச்டிஎப்சி வங்கி 1.95%, கோல் இந்தியா 1.66%, டாடா ஸ்டீல் 1.66%, ஐசிஐசிஐ வங்கி 1.46% அளவுக்கு லாபம் ஈட்டின.
மொத்தம் மும்பை பங்குச் சந்தையில் ரூ. 17,236 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் ரூ. 76,968 கோடியைத் தொட்டது.