தருமபுரி, பிப்.11: தமிழகத்தில் உள்ள பால் சார்ந்த பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பிகார் மாநிலத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்றைய சூழலில் விவசாயமும், கால்நடையும் இணைந்த வளர்ச்சியே நாட்டுக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் விவசாயி ஆர்.ஜி. ரங்கசாமியின் கன்று வளர்ப்பு மையத்தை (பண்ணை) சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
விழாவில் வணக்கம் என்ற வார்த்தையை மட்டும் அவர் தமிழில் உச்சரித்துவிட்டு ஹிந்தியில் உரை நிகழ்த்தினார்.
விழாவுக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள் என்பதால் அவரது உரையை ஹட்ஸன் நிறுவனத்தின் சந்தைப் பிரிவு நிர்வாகி ஜெ. பிரசன்னா வெங்கடேஷ் தமிழில் மொழி பெயர்த்தார். அமைச்சர் பேச்சு விவரம்:
பிகாரில் நாளொன்றுக்கு 1.73 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1.45 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பிகாரைவிட தமிழகத்தில் பால் சார்ந்த பொருள்கள் தயாரிப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் உற்பத்தி அதிகளவில் உள்ளது.
எனவே, தமிழகத்தில் பால் சார்ந்த பொருள் தயாரிப்பு நிறுவனங்களை பிகாரிலும் தொழில் தொடங்க அழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தி வருவதைப் போன்று பால் உற்பத்தி, பசு மாடு வளர்ப்பு, பால்பொருள்கள் தயாரிப்பு, மீன் உற்பத்தி, கோழிப் பண்ணை உள்ளிட்ட கால்நடை வளத்தையும் பிகாரில் பெருக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
இதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு வருகிறோம்.
வேளாண்மைக்கு நிகராக கால்நடை வளமும் இருந்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும். இதை விவசாயிகளால் மட்டுமே சாதிக்க முடியும். கிராமத்தில் விளையும் அனைத்துமே நகரத்துக்கு பயன்படும் நிலைதான் உள்ளது.
எனவேதான், விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பு என்பது கிராமப்புற மக்களுக்கு அவசியமாகிறது என்றார் அவர்.
இந்த மையத்தில் உள்ள கன்றுகளுக்குத் தேவையான மருத்துவ உதவி, பராமரிப்பு ஆலோசனை, தீவனம் வழங்குதல், வளர்ப்பு முறை ஆகிய அனைத்தையும் ஹட்ஸன் அக்ரோ நிறுவனம் இலவசமாக வழங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஜி. சந்திரமோகன் உறுதியளித்தார்.
மேலும், தமிழகத்தில் இதுபோன்று 500 பண்ணைகளை ஏற்படுத்தவுள்ளதாகவும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பண்ணைகள் ஏற்படுத்தப்படும் என்றார் அவர்..
தருமபுரியைத் தொடர்ந்து நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லும் அமைச்சர், அங்கு கோழிகள் வளர்க்கப்படும் விதம் குறித்து தனது அமைச்சக அதிகாரிகளுடன் பார்வையிடவுள்ளார்.