Enable Javscript for better performance
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி

    By dn  |   Published on : 01st December 2012 12:22 AM  |   அ+அ அ-   |    |  

    car_engine

    மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    இவ்வாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதம் எனத் தெரிகிறது. 2012-2013 நிதி ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி விகிதமான 5.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். கடந்த நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

    வேளாண் உற்பத்தி மற்றும் தயாரிப்புத் துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இப்போது உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்தக் கால அளவில் தயாரிப்புத் துறை அடைந்த வளர்ச்சியின் அளவு 0.8 சதவீதம். வேளாண் துறையில் 1.2 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்தது.

    எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார். பருவ மழை குறைந்ததும் தயாரிப்புத் துறையில் தேக்க நிலையும்தான் இதற்குக் காரணம் என்றார்.

    தயாரிப்புத் துறை எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் காணவில்லை. இந்த துறைக்கு உரிய உந்துதல் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என இந்திய தொழிலக-வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) தலைவர் ஆர்.வி.கனோரியா கருத்து தெரிவித்திருக்கிறார்.

    சென்ற நிதி ஆண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி, கடந்த ஒன்பது ஆண்டுகளிலேயே மிக மோசமான வளர்ச்சி விகிதமான 6.5 சதவீதத்தை தொட்டது. இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணக்கிட்டிருக்கிறது.

    kattana sevai