விமானச் சேவையை மேம்படுத்த ஸ்டார் அலையன்ஸ் விமான நிறுவனத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற விமான நிறுவனமாக திகழும் ஸ்டார் அலையன்ஸ் நிறுவன குழுமத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளதால், உலகம் முழுவதும் உள்ள 1,300 பகுதிகளுக்கு பயணிகள் செல்ல முடியும். இதற்கு ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ள 27 விமான நிறுவனங்கள் வரிசையில் ஏர் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜு கூறியது:
இணைப்பு நடவடிக்கை மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் 4 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானச் சேவைக்காக ஜூலை மாதத்தில் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் போயிங் 787, ஏர் பஸ் ஏ-320 ஆகிய விமானங்கள் பெறப்படவுள்ளன. இந்த விமானங்களில் ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்தின் லோகோ இடம்பெறவுள்ளது.
உலகம் முழுவதும் 195 நாடுகளில் உள்ள 1,328 விமான நிலையங்களுக்கு நாள்தோறும் இயக்கப்படும் 21,980 விமான சேவைகளை ஏர் இந்தியா பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ள விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 4,338 விமானங்களில் ஆண்டுதோறும் 64 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் விமானச் சேவையை பயன்படுத்த முடியும்.
ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லுப்தான்ஸா, ஏர் சீனா, ஏர் கனடா, துருக்கி, சுவிஸ், ஆஸ்திரியா, தாய்லாந்து ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான நேரம், பயணச்சீட்டு பதிவு ஆகியவை ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையோன விமானச் சேவை 13 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கக் கூடும்.
இது குறித்து ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்தின் மார்க் சூவாப் கூறியது: இந்தியாவின் விமானச் சந்தை தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து தங்களது சேவைகளை மேம்படுத்தி வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 2011 ஆம் ஆண்டு முயற்சிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி காரணமாக இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளன என்றார்.