Enable Javscript for better performance
ரூ.2,500 கோடி மூலதனம் திரட்டியது ஓலா: 200 நகரங்களுக்கு விரிவாக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.2,500 கோடி மூலதனம் திரட்டியது ஓலா: 200 நகரங்களுக்கு விரிவாக்கம்

    By dn  |   Published on : 17th April 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ola

    வாடகை கார் சேவை நிறுவனமான ஓலா தனது செயல்பாடுகளை 200 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தோடு 400 மில்லியன் டாலரை (சுமார் ரூ. 2,500 கோடி) வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியுள்ளதாகத் தெரிவித்தது.

    இது தொடர்பாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் புது தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

    ஜப்பானின் ஸாஃப்ட் பாங்க், டி.எஸ்.டி. குளோபல், டைகர் குளோபல் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள் மூலம் 5-ஆவது சுற்று (ஸீரீஸ்-இ) முதலீடுகளை ஓலா பெற்றுள்ளது. இதன் மூலம் தற்போது 400 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2,500 கோடி) திரட்டப்பட்டுள்ளது. இந்தத் தொகையுடன் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஓலா பெற்றுள்ள முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ. 5,000 கோடியாக உள்ளது.

    ஓராண்டுக்கு முன்னர் 10 நகரங்களில் எங்கள் செயல்பாடுகளைத் தொடங்கினோம். தற்போது 100 நகரங்களில் செயல்பட்டு வருகிறோம். புதிய முதலீடுகளைக் கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 100 நகரங்களுக்கு எங்களது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யவிருக்கிறோம்.

    சிறு நகரங்கள், ஊர்களில் உள்ள ஓட்டுநர்களை தொழிலமுனைவோராக மேம்படுத்த உதவுவோம். வாடிக்கையாளர்கள், வாடகைக் கார் ஓட்டுநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அதி நவீன தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தை அளிக்கத் தொடர்ந்து முதலீடு செய்வோம்.

    பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து, "ஓலா பிரகதி' திட்டம் மூலம், தினசரி முறையில் கடன் தொகையைத் திருப்பி அளித்தல், குறைந்த முன்பணம் செலுத்தி, சிறப்புத் தள்ளுபடி விலையில் கார் வாங்குதல் உள்ளிட்ட வசதிகளைப் பெற முடியும். அடுத்த இரு ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஓட்டுநர்-தொழில்முனைவோர் உருவாக்கப்படுவர்.

    முன்னோடித் திட்டமாக உணவு டெலிவரி செய்யும் சேவையான ஓலாகஃபே திட்டத்தை தொடங்கியிருக்கிறோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai