Enable Javscript for better performance
டிசிஎஸ் - சிஎம்சி இணைப்புக்கு பங்குச் சந்தை ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    
    tcs_cms

    தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சி.எம்.சி.யை டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனத்துடன் இணைப்பது தொடர்பாக தேசிய பங்குச் சந்தையும் மும்பை பங்குச் சந்தையும் தங்களது ஒப்புதலை வழங்கியுள்ளன.

    டாடா குழுமத்தைச் சேர்ந்த சி.எம்.சி. நிறுவனம், 1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகச் செயல்பட்டு வந்தது. தற்போது, சி.எம்.சி.யில் சுமார் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், சி.எம்.சி. நிறுவனத்தை, டாடா கன்ஸல்டன்ஸியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. சி.எம்.சி.யின் செயல்பாடுகளை மேலும் உறுதிப்படுத்த இந்த இணைப்பு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின் கீழ், ரூ. 10 மதிப்புள்ள 100 சி.எம்.சி. பங்குகளுக்கு, ரூ. 1 மதிப்புள்ள 79 டி.சி.எஸ். பங்குகள் அளிக்கப்படும்.

    இந்த இணைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த இரு முன்னணி பங்குச் சந்தைகளும், அடுத்த 6 மாதங்களுக்கு ஒப்புதல் அளிப்புக் கடிதம் செல்லுபடியாகும் எனவும், அதற்குள் உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட ஒப்புதலைப் பெற வேண்டும் எனவும் தெரிவித்தன.

    முன்னதாக, இவ்விரு நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்கள் இந்த இணைப்புக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் வழங்கின.

    ஒரு நிறுவனத்துடன் மற்றொரு நிறுவனத்தை இணைப்பது அல்லது துணை நிறுவனச் செயல்பாடுகளைப் பிரித்து, தனி நிறுவனம் உருவாக்குவது ஆகிய திட்டங்களுக்குப் பங்குச் சந்தைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

    இரு முன்னணி பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தையும் மும்பை பங்குச் சந்தையும் நிறுவனங்களின் இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து, இது தொடர்பான விவரங்களை உயர் நீதிமன்றத்தில் அளித்து, மேற்கொண்டு இணைப்புக்கான அடுத்த கட்ட ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai