Enable Javscript for better performance
வாசனைப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    16

    சர்வதேச சந்தைகளில் இந்திய வாசனைப் பொருள்களுக்கான வரவேற்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, அவற்றின் ஏற்றுமதி கடந்த ஆண்டு கணிசமாக அதிகரித்தது.
     வாசனைப் பொருள்கள் வாரியத்தின் (ஸ்பைஸஸ் போர்டு) தலைவர் ஏ.ஜெயதிலக் கொச்சியில் திங்கள்கிழமை தெரிவித்திருப்பதாவது:
     ஏலக்காய், மிளகாய், தனியா, மிளகு, ஜீரகம், மஞ்சள், இஞ்சி, வாசனை எண்ணெய் வகைகள் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
     ஏற்றுமதி அளவைப் பொருத்த வரையில், கடந்த 2014-2015 நிதி ஆண்டில் இந்திய வாசனைப் பொருள்களின் ஏற்றுமதியில் 9 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பில் 8 சதவீத வளர்ச்சியும் அமெரிக்க டாலர் மதிப்பில் 7 சதவீத வளர்ச்சியும் காணப்பட்டுள்ளது. இந்திய வாசனைப் பொருள்களின் இணையற்ற தரம் உலக சந்தையில் அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதற்கு இதுவே நல்ல சான்று எனக் கூறலாம். கடந்த நிதி ஆண்டு ஏற்றுமதியான வாசனைப் பொருள்களின் அளவு 8,93,920 டன். இதன் மூலம் பெற்ற வருவாய் ரூ. 14,899.68 கோடியாக (2,432.85 மில்லியன் டாலர்) இருந்தது.
     வாசனைப் பொருள்களில் மிக அதிக அளவில் ஏற்றுமதியாவது மிளகாய். கடந்த ஆண்டு 3,47,000 டன் மிளகாய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது. முந்தைய ஆண்டைவிட மிளகாய் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரித்தது.
     "வாசனைப் பொருள்களின் அரசன்' என அறியப்படும் மிளகு கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியான அளவு 21,450 டன் ஆகும். 'வாசனைப் பொருள்களின் அரசி' என்று அழைக்கப்படும் சிறு வகை ஏலக்காயின் ஏற்றுமதி அளவு 3,795 டன் ஆக இருந்தது.
     மொத்த ஏற்றுமதியில், மிளகாய், மஞ்சள், ஜீரகம், தனியா, இஞ்சி ஆகியவற்றின் அளவு 70 சதவீதமாக இருந்தது. ஏற்றுமதி மதிப்பைப் பொருத்த வரையில், புதினா, மிளகாய், மிளகு, ஜீரகம், வாசனை எண்ணெய்கள் ஆகியவற்றின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது என்று வாசனைப் பொருள்கள் வாரியத்தின் (ஸ்பைஸஸ் போர்டு) தலைவர் ஏ.ஜெயதிலக் கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai