சுடச்சுட

    

    மே மாதத்துக்கான ஏற்றுமதி 20 சதவீதம் சரிந்ததாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
     கடந்த மே மாதத்துக்கான ஏற்றுமதி மதிப்பு 22.34 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ. 1.4 லட்சம் கோடி) இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 20.19 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஏற்றுமதிகளின் மதிப்பு 27.99 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ. 1.7 லட்சம் கோடி).
     சர்வதேச பொருளாதாரத் தேக்கம்தான் ஏற்றுமதி குறைவதற்கான முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாயின் மதிப்பு உயர்வு பெற்றது ஆகிய
     காரணங்களாலும் ஏற்றுமதி மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.
     பெட்ரோலியம் பொருள்கள், ரத்தினங்கள், நகைகள், பொறியியல் துறைப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்தது.
     மே மாதத்தின்போது, இறக்குமதிகளும் குறைந்ததாக மத்திய வர்த்தகத் துறை புள்ளிவிவரங்களிலிருந்து தெரிய வந்திருக்கிறது. சென்ற ஆண்டு மே மாத இறக்குமதிகளுடன் ஒப்பிடும்போது 16.52 சதவீதம் குறைந்து அதன் மதிப்பு 32.75 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 2.06 லட்சம் கோடி) இருந்தது.
     வர்த்தகப் பற்றாக்குறை 10.4 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 65,500 கோடி) குறைந்துள்ளது. சென்ற 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில்
     நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மதிப்பு 11.23 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 70,700 கோடி) இருந்தது.
     கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு 40.97 சதவீதம் குறைந்தது. தங்கம் இறக்குமதி 10.47 சதவீதம் குறைந்து அதன் மதிப்பு 24.21 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 1.52 லட்சம் கோடி) உள்ளது.
     இந்த ஆண்டில் ஏப்ரல் - மே ஆகிய மாதங்களில் ஏற்றுமதிகள் 17 சதவீதம் குறைந்தது. இறக்குமதி 12 சதவீதம் குறைந்தது.
     சென்ற 2014-2015 நிதி ஆண்டில் 340 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி நடைபெற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 310.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிதான்
     நடைபெற்றது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai