சுடச்சுட

    

    5 அரசு வங்கிகளுக்கு தலைவர்கள் நியமனம்: பரிந்துரை வழங்கியது ரிசர்வ் வங்கி

    By புது தில்லி  |   Published on : 23rd June 2015 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுத் துறையைச் சேர்ந்த 5 வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்கள் பதவிக்கான பெயர்களை ரிசர்வ் வங்கி பரிந்துரைத்தது.
     பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி ஆகியவற்றுக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிப் பதவிகளுக்குத் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதித் துறை சேவைப் பிரிவு, அந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது.
     முன்னதாக வெளியிடப்பட்ட கடுமையான நிபந்தனைகளின் கீழ், போதிய தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. இதையடுத்து, அப்பதவிகளுக்கான சில தகுதிகள் தளர்த்தப்பட்டன. உதாரணமாக, அதிகபட்ச வயது வரம்பு 55 வயதிலிருந்து 57 வயதாக உயர்த்தப்பட்டது. மேலும், வங்கி நிர்வாகக் குழுவில் இயக்குநராக இடம் பெற்ற குறைந்தபட்ச அனுபவம் 3 ஆண்டுகள் என்பதிலிருந்து ஓராண்டாகக் குறைக்கப்பட்டது. விண்ணப்ப கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
     தனியார் வங்கிகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. மொத்தம் 26 பேர் விண்ணப்பித்தனர். இவர்களின் நேர்காணல் கடந்த வாரம் நடைபெற்றது.
     இதையடுத்து, 11 பேர் பெயர்கள் இடம்பெறும் பரிந்துரைப் பட்டியலை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான குழு இறுதி செய்துள்ளது. இதில் தனியார் வங்கியைச் சேர்ந்த எவரும் இடம் பெறவில்லை. பஞ்சாப் நேஷனல் வங்கி இயக்குநர், பரோடா வங்கியின் செயல் இயக்குநர், ஐ.டி.பி.ஐ. வங்கியின் துணை நிர்வாக இயக்குநர், அரசு வங்கியொன்றின் தலைவர்-நிர்வாக இயக்குநர் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் உள்ளன.
     இந்தப் பரிந்துரைப் பட்டியல் மத்திய நிதி அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு உள்ளிட்ட பிற விவகாரங்கள் தொடர்பான ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னர், மத்திய அமைச்சரவையின் பதவி நியமனக் குழு இறுதி முடிவு எடுக்கும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai