சுடச்சுட

  

  சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்ற அரசு வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம்: ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

  By  புது தில்லி,  |   Published on : 27th June 2015 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  32

  பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளின் மூலதனம் தற்போது போதிய அளவு உள்ளதாகவும், எதிர்காலத்தில் சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்ற கூடுதல் மூலதனம் செலுத்தப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
   இந்திய வர்த்தக சபைகளின் சங்கம் (அசோசேம்) சார்பில் புது தில்லியில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர்.காந்தி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
   பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளின் மூலதனம் தற்போது போதுமானதாக இருக்கிறது. வருங்காலப் பொருளாதார வளர்ச்சி, அடுத்து வரும் ஆண்டுகளில் சர்வதேச "பேஸல்' விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளிட்ட காரணங்களால், அரசு வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும்.
   "வரும் முன் காப்போம்' என்கிற அடிப்படையில், இந்திய வங்கிகள் முன்கூட்டியே தங்களது மூலதன நிலையை உறுதிப்படுத்திக் கொண்டால், அவற்றின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றார்.
   கடன் அளிக்க வங்கிகளின் கூட்டமைப்பை உருவாக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக ஆர்.காந்தி மேலும் கூறினார். அது முற்றிலும் புதிய முறை எனவும், வங்கிகளுடன் அது தொடர்பாகப் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
   பல்வேறு நிதி நிலைத் தேவைகளை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் கூடுதல் மூலதனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப, வங்கியின் அடிப்படை மூலதனத்தை அதிகரிக்கவும் கூடுதல் மூலதனம் செலுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் பொதுத் துறையைச் சேர்ந்த பல்வேறு வங்கிகளுக்கு மொத்தமாக ரூ. 7,940 கோடியை கூடுதல் மூலதனமாகச் செலுத்தப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
   கடந்த ஆண்டு, செயல்பாட்டுத் திறனின் அடிப்படையில், பொதுத் துறையைச் சேர்ந்த 9 வங்கிகளில் ரூ. 6,990 கோடி கூடுதல் மூலதனம் செலுத்தப்பட்டது. வங்கிகளுக்கான சர்வதேச "பேஸல்' விதிமுறைகள் 2018-ஆம் நடைமுறைக்கு வரவுள்ளது. அப்போது நாட்டின் அரசுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக ரூ. 2.40 லட்சம் கோடி தேவைப்படும் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, பொதுத் துறை வங்கிகளில் அரசுப் பங்கை 52 சதவீதம் வரை குறைத்துக் கொண்டு, சந்தையிலிருந்து ரூ. 1.60 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
   
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai