அலைக்கற்றையைப் பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்துடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்ததாவது:
ராஜஸ்தான், உத்தரபிரதேசம் (மேற்கு), பிகார் மற்றும் அஸ்ஸாம் ஆகிய நான்கு தொலைத் தொடர்பு வட்டங்களில் அலைக்கற்றைகளைப் பங்கிட்டுக் கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏர்டெல் நிறுவனத்துடன் தொடங்கியுள்ளது.
அலைக்கற்றைப் பங்கீடு தொடர்பாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனும் பேச்சு நடத்த பி.எஸ்.என்.எல். தயாராக உள்ளது.
பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய பிஎஸ்என்எல் சார்பில் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த அலைக்கற்றை பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஜூன் மாதத்துக்குள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்கள் வைத்துள்ள மொத்த அலைக்கற்றைகளையும் பிற நிறுவனங்களுடன் பங்கிட்டுக் கொள்ளலாம் என்கிற விதிமுறை
தற்போது நடைமுறையில் உள்ளது.