கான்கோர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் 5 சதவீத பங்கு விற்பனை வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் மத்திய அரசு ரூ.1,165 கோடியை திரட்டியது.
கான்கோர் நிறுவனத்தின் கோரிக்கை அடிப்படையிலான 5 சதவீத பங்கு (97.48 லட்சம் பங்குகள்) விற்பனை புதன்கிழமை தொடங்கியது. பங்கு ஒன்றின் அடிப்படை விலை ரூ.1,195ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இரண்டாவது நாளான வியாழக்கிழமை கான்கோர் நிறுவனத்தின் பங்குகளுக்கு சில்லறை முதலீட்டாளர்களிடையே வரவேற்பு அதிகமாக இருந்தது. பங்குகளின் விலையில் அவர்களுக்கு 5 சதவீத கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டது.
சில்லறை முதலீட்டாளர்களுக்கு 19.49 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அவர்களிடமிருந்து 1.26 மடங்கு அதிகமாக பங்குகள் வேண்டி (24.59 லட்சம் பங்குகள்) விண்ணப்பங்கள் வந்ததாக மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
கான்கோர் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின் மூலம் மத்திய அரசு ரூ.1,165 கோடியை திரட்டியது.
ரயில்வே அமைச்சக நிர்வாகத்தின் கீழ் கான்கோர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ரயில்வே போக்குவரத்துக்குத் தேவையான கன்டெய்னர்கள், கன்டெய்னர் முனையங்கள், சேமிப்புகிடங்கு, மதிப்புக் கூட்டுத் தீர்வு உள்ளிட்ட சேவைகளை கான்கோர் நிறுவனம் ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்கி வருகிறது.
நடப்பு நிதி ஆண்டு பட்ஜெட்டில் பங்கு விற்பனை மூலம் ரூ.41,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. சந்தை நிலவரம் ஊக்கமளிக்கும் விதத்தில் இல்லாததால் பங்கு
விற்பனை இலக்கு ரூ.25,000 கோடியாக குறைக்கப்பட்டது.