பிப்ரவரி மாதத்தில் கார் விற்பனை 4.21 சதவீதம் சரிவடைந்ததாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது.
பிப்ரவரி மாத வாகன விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்களை சங்கத்தின் தலைமை இயக்குநர் சுகதோ சென் புது தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:
ஜாட் பிரிவினரின் இடஒதுக்கீட்டு போராட்டம் மோட்டார் வாகனத் துறையை பெரிதும் பாதித்தது.
குறிப்பாக, இவர்களின் போராட்டம் காரணமாக மாருதி சுஸýகியின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டதுடன், அவற்றைக் கொண்டு செல்லும் பணியும் பல நாள்கள் முடங்கியது.
வாடிக்கையாளர்கள் பலர் பட்ஜெட்டில் உற்பத்தி வரிக் குறைப்பை எதிர்பார்த்து வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ஒத்திப்போட்டதும் கார்கள் விற்பனை சரிவுக்கு காரணமாக அமைந்தது.
சென்ற பிப்ரவரியில் கார் விற்பனை 4.21 சதவீதம் குறைந்து 1,64,469-ஆக இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் கார் விற்பனை 1,71,703-ஆக காணப்பட்டது.
பட்ஜெட்டில் பயணிகள் வாகனங்களுக்கான உற்பத்தி வரிகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மோட்டார் வாகனங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் 1-4 சதவீதம் உள்கட்டமைப்பு வரி (இன்ப்ராஸ்ட்ரக்சர் செஸ்) விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ரூ.10 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள சொகுசு கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இரு-சக்கர வாகனங்களைப் பொருத்தவரையில் அதன் விற்பனை சென்ற பிப்ரவரியில் 12.76 சதவீதம் அதிகரித்து 13,62,219-ஆக இருந்தது. மோட்டார் சைக்கிள் விற்பனை 11.05 சதவீதம் உயர்ந்து 8,59,624-ஆக இருந்தது.
வர்த்தக வாகனங்கள் விற்பனை சென்ற பிப்ரவரியில் 19.93 சதவீதம் அதிகரித்து 62,359- ஆக இருந்தது. ஒட்டுமொத்த மோட்டார் வாகன விற்பனை சென்ற பிப்ரவரி மாதத்தில் 11.76 சதவீதம் வளர்ச்சியடைந்து 17,03,688-ஆக இருந்தது.
மத்திய பட்ஜெட்டில் வேளாண் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதையடுத்து, கிராமப்புற பகுதிகளில் வாகனங்களுக்கான தேவை படிப்படியாக
அதிகரிக்கும் என்று சுகதோ சென் கூறினார்.