பங்குச் சந்தை: ஏற்றம்-இறக்கம் நிறைந்த வாரம்

ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றத்தால் கடந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
பங்குச் சந்தை: ஏற்றம்-இறக்கம் நிறைந்த வாரம்

ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றத்தால் கடந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

முதலீட்டாளர்களின் நீண்ட எதிர்பார்பான ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றம், தயாரிப்புத் துறை உற்பத்தி சூடுபிடிப்பு, முக்கிய துறைகளின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது, அன்னிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு ஆகியவை பங்குச் சந்தையில் கடந்த வாரம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின.

இருப்பினும், ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டால் அது பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால் லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இதனால், கடந்த வாரத்தில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கம் நிறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து மத்திய வங்கி கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்ததுடன், எதிர்பார்த்ததைவிட பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளையும் அறிவித்தது. இதனால், சர்வதேச பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றம் பெற்றது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

குறிப்பாக, உலோகத் துறை பங்குகளின் விலை அதிக அளவாக 3.68 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, மோட்டார் வாகனப் பங்குகளின் விலை 2.73 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு பங்குகளின் விலை 1.24 சதவீதமும் உயர்ந்தன. அதேசமயம், முதலீட்டாளர்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் பொறியியல் பொருள்கள் பங்குகளின் விலை 2.09 சதவீதமும், நுகர்வோர் சாதன துறை பங்குகளின் விலை 1.44 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

டாடா ஸ்டீல் பங்கின் விலை 7.37 சதவீதம் உயர்ந்தது. ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 7.11%, பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 5.49%, மாருதி சுஸýகி பங்கின் விலை 4.06%, ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 3.55%, ஓ.என்.ஜி.சி. பங்கின் விலை 2.66%, டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 2.65% ஏற்றம் கண்டன.

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. பங்கின் விலை 6.37 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, லூபின் (3.80%), எல் அண்ட் டி (2.91%), எச்.டி.எப்.சி (2.47%) உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமான இறக்கத்தைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 26 புள்ளிகள் அதிகரித்து 28,078 புள்ளிகளாக நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.17,925.47 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 8,683 புள்ளிகளாக நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,08,357.42 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com