இறக்குமதி அதிகரிப்பு: உப்பு உற்பத்தி தொழில் பாதிப்பு

உப்பு உற்பத்தியில் சிறந்து விளங்கிய தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாகவே உற்பத்தி குறைந்து வருகிறது. 
இறக்குமதி அதிகரிப்பு: உப்பு உற்பத்தி தொழில் பாதிப்பு

உப்பு உற்பத்தியில் சிறந்து விளங்கிய தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாகவே உற்பத்தி குறைந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்த தூத்துக்குடி, தற்போது உப்பு இறக்குமதியை நம்பும் சூழல் உருவாகியுள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
நாட்டில் உற்பத்தியாகும் மொத்த உப்பில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக அளவு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 80% வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
இம்மாவட்டத்தில் தூத்துக்குடி, ஆறுமுகனேரி, முத்தையாபுரம், வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார் உள்பட 22 ஊர்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொழிலில் 400 சிறிய உற்பத்தியாளர்களும், ஏறத்தாழ 100 பெரிய உற்பத்தியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். உப்பளத்தை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் சிறுமணி உப்பு (உணவுக்கு பயன்படுத்தப்படுவது) தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் உப்பு விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு ஏறத்தாழ 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி என்ற நிலை மாறி, கடந்த சில ஆண்டுகளாக முழு உற்பத்தி அளவை எட்ட முடியாத நிலைக்கு தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உற்பத்தி குறைவுக்கு காரணம்: பருவநிலை மாற்றம், அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுத் துகள்கள், தொழிலாளர் பற்றாக்குறை, தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் உள்ளிட்ட காரணங்களால் உப்பு உற்பத்தி குறைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தரத்துக்கு ஏற்ப டன் ஒன்றுக்கு ரூ. 700 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, குஜராத் மாநிலத்தில் குறைந்த விலைக்கு உப்பு கிடைப்பதால், அங்கிருந்து அதிக அளவு உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக அடிக்கடி கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் உப்பின் அளவு அதிகரித்துள்ளதால், தூத்துக்குடியில் உள்ள உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன் கூறியது: நிகழாண்டில் இதுவரை 45 சதவீத உப்பு உற்பத்தி மட்டுமே நடைபெற்றுள்ளது. மேலும் 30% வரை மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற வாய்ப்பு உள்ளதால் இவ்வாண்டு முழு உற்பத்தி அளவை எட்ட முடியாது.
தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்புக்கு விலை அதிகம் என்பதால் அவசரத் தேவை, குறைந்த விலை என்பதைக் கருத்தில் கொண்டு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உப்பு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மானிய விலையில் மின்சாரம், நவீன கருவிகள் மூலம் உப்பு உற்பத்தி, நில வாடகை குறைப்பு போன்றவை மூலமே உப்பு உற்பத்தியை அதிகரிக்க முடியும். தொழிலாளர் பற்றாக்குறையும், அவர்களுக்கான ஊதியமும் பெரும் பிரச்னையாகவே இருந்து வருகிறது என்றார்.
நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம்: இப்பிரச்னை குறித்து உப்புத் துறை அதிகாரிகள் கூறியது: குஜராத் மாநிலத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் நவீன கருவிகளை கையாளத் தொடங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், டன் ஒன்றுக்கு
ரூ. 250 முதல் ரூ. 300 வரை உப்பு விற்பனை செய்தாலும் அவர்களுக்கு கட்டுப்
படியாகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த சிலர் இறக்குமதி செய்கின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள உப்பு உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு விலையை அதிகரிக்காத அளவில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
உப்பு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இருப்பினும், அதிக விலை தருகிறோம் என்ற சில ரியல் எஸ்டேட் தரகர்களின் நெருக்கடியால் சிலர் உப்பளங்களை கிடங்குகள் கட்டுவதற்கும், மற்ற உபயோகத்துக்கும் விற்பனை செய்துவிடுகின்றனர். இதன் மூலம் உப்பு உற்பத்தியைவிட தங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதாக உப்பள உரிமையாளர்கள் தெரிவிப்பதால் அரசால் எதுவும் செய்ய முடியவில்லை என்றனர் அவர்கள்.
பாரம்பரியம் மிக்க உப்பு உற்பத்தித் தொழில் குறைந்து கொண்டே வருவதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் புதிதாக உப்பு உற்பத்தியாளர்கள் வருகை இல்லாததும் ஒரு காரணமாகும். எனவே, நவீன தொழில்நுட்பத்துடன் உப்பு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டால் மட்டுமே இறக்குமதி நிலையைத் தவிர்த்து மீண்டும் அதிக உற்பத்தி என்ற இலக்கை தூத்துக்குடி மாவட்டத்தால் எட்டிப்பிடிக்க முடியும் என்கின்றனர் உப்புத் துறை அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com