Enable Javscript for better performance
தங்க நகைகளுக்கான "ஹால்மார்க்' முத்திரையில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    
    gold_pure

    தங்க நகைகளுக்கான "ஹால்மார்க்' முத்திரையில் 2 முக்கிய மாற்றங்களை இந்திய தர நிர்ணய அமைவனம் அமல்படுத்த உள்ளது. இந்தப் புதிய மாற்றம் ஜனவரி 1 -ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஹால்மார்க் முத்திரை: தங்கத்தின் தரத்தை முறைப்படுத்தவும், பொதுமக்கள் நம்பிக்கையுடன் நகை வாங்கும் வகையிலும் "ஹால்மார்க் முத்திரை' 2003-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நாடு முழுவதும் உள்ள தங்கத்தின் தரத்தைப் பரிசோதித்து, அவற்றுக்கு ஹால்மார்க் சான்று அளிக்க தனியாருக்கு உரிமம் அளித்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை 40 -க்கும் மேற்பட்ட மையங்களில் ஹால்மார்க் சான்று அளிக்கப்படுகிறது.
    7 வகை முத்திரை: இதுவரை 23, 22, 21, 18, 17, 14, 9 ஆகிய 7 வகையான கேரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு வந்தது. மேலும் நகைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் ஹால்மார்க் முத்திரையில் பிஐஎஸ் முத்திரை, தங்கத்தின் சுத்தத்தன்மை (எத்தனை கேரட் தங்கம் என்பதைக் குறிக்கும் எண்), தங்கத்தை சோதனை செய்து முத்திரை அளித்த மையத்தின் முத்திரை, நகை செய்யப்பட்ட ஆண்டு, நகை விற்பனை செய்யும் கடையின் முத்திரை ஆகிய 5 குறியீடுகள் இதில் இடம் பெற்றிருக்கும்.
    முத்திரையில் மாற்றம்: இந்த நிலையில், தங்க நகைகளுக்கான முத்திரையில் 2 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
    இதுதொடர்பாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென்மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    இனிமேல் 14, 18, 22 ஆகிய 3 வகையான தங்கநகைகளுக்கு மட்டுமே "ஹால்மார்க்' முத்திரையிடப்படும். பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் 14 காரட் நகைக்கான நேர்த்தித்தன்மையின் அளவு 585, 18 காரட் நகைக்கு 750, மற்றும் 22 காரட் நகைக்கு 916 என்பதைக் குறிக்கும் வகையில், நகைகளில் 14ஓ585, 18ஓ750, 22ஓ916 என்று குறிப்பிடப்படும். இதற்கு முன்பு நேர்த்தித்தன்மையைக் குறிக்கும் 916 என்பது போன்ற எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.
    மேலும் ஹால்மார்க் முத்திரையில் இடம்பெற்றிருந்த 5 குறியீடுகளில் முத்திரையிடப்பட்ட ஆண்டு நீக்கப்பட்டு, மீதம் உள்ள 4 குறியீடுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக சென்னை பிஐஎஸ் தென்மண்டல அலுவலகத்தின் விஞ்ஞானி எஸ்.தயானந்த் கூறியது: பொதுமக்கள் அதிகம் உபயோகப்படுத்தும் 14, 18, 22 கேரட் நகைகளுக்கு மட்டும் ஹால்மார்க் முத்திரை அளிக்கப்பட உள்ளது. ஜனவரி 1 -ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும். அதாவது ஜனவரி 1 -ஆம் தேதிக்கு மேல் ஹால்மார்க் முத்திரையிடப்படும் நகைகளில் மேற்கூறிய மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும். ஜனவரி 1 -ஆம் தேதிக்கு முந்தைய நாள்களில் முத்திரையிடப்பட்ட நகைகளில் பழைய குறியீடுகளே இடம்பெற்றிருக்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai