Enable Javscript for better performance
கரன்ஸி சவாலை சமாளிப்பாரா பிரதமர்?- Dinamani

சுடச்சுட

  
  modii

   

  இரவு 8 மணி. "ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் சட்டப்படி செல்லாது' என்று அறிவிக்கிறார் பிரதமர் மோடி.
  இச் செய்தியைக் கேட்ட பொதுமக்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லை. ஒரு 500 ரூபாய் நோட்டு வைத்திருந்த கிராமத்து மூதாட்டியும் சரி, கட்டுக்கட்டாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கருப்புப் பணமாகப் பதுக்கி வைத்திருந்த பண முதலைகள் வரை அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். செய்வதறியாது திகைத்தனர். அறிவித்து 20 நாள்கள் கழிந்துவிட்டன. ஆனால், அவர்கள்தாம் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. கருப்புப் பணத்தை எப்படி மாற்றுவது? என்று மூளையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். பிரச்னையைச் சந்திக்க விரும்பாதவர்கள் ஆற்றில் பணத்தை வீசி வருகின்றனர். சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். சிலர், கோயில் உண்டியல்களில் அள்ளி வழங்கி வருகின்றனர்.
  நாட்டின் பொருளாதாரத்தைப் பொருத்தவரையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதற்கு வங்கிகள் தேசியமயமாக்கல், தாராள பொருளாதாரக் கொள்கை என சொல்லிக் கொண்டே போகலாம். தற்போது கரன்சி விவகாரம். சற்று கடுமையாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலன் கிடைக்குமா என்பது டிசம்பருக்குப் பிறகே தெரியவரும்.
  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாட்டின் முக்கிய தொழிலதிபர்களுள் ஒருவரான ரத்தன் டாடா மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு போன்ற தொழில் துறை அமைப்புகள் பிரதமர் மோடியின் இந்த உறுதியான நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் இச் செயலை கடுமையாக எதிர்த்துள்ளன.
  கருப்புப் பணத்தையும், பாகிஸ்தானில் இருந்து அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள கள்ள நோட்டுகளையும் ஒழிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதச் செயல்களை ஒடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என்று பிரதமர் மோடி உறுதிபடக் கூறியுள்ளார். தமது இந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
  அறுவைச் சிகிச்சை செய்யும்போது வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதற்குப் பின்னர் சுகமாக இருக்கலாம் அல்லவா என அரசுத் தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், இது ஒன்றும் சிறிய காயத்துக்கான அறுவைச் சிகிச்சை இல்லையே என்பது மற்றொரு தரப்பினரின் வாதம். இதனால், இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாள்களாக உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. பணப் புழக்கம் குறைந்துள்ளது, கடைகள், உணவு விடுதிகளில் விற்பனை சரிந்துள்ளது என்பது நாடு தழுவிய அளவில் உள்ள தொழில்-வர்த்தக சங்கங்களின் கூற்றாக உள்ளது.
  குறிப்பிட்டுச் சொல்லப் போனால், நாட்டில் புழக்கத்தில் உள்ள ரொக்கப் பணத்தில் சுமார் 86% செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் 7-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு விடப்படும் பெரிய சவால் இது.
  லஞ்சம், ஊழலை ஒழிக்கவும், தீவிரவாதச் செயல்களுக்காகச் செல்லும் பணத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கூற்று ஒருபுறம் உண்மையென்றாலும், வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே இந்த செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கருப்புப் பண விவகாரத்தை பா.ஜ.க. தனது பிரசாரத்தில் முக்கிய அம்சமாக வைத்தது. ஆட்சிக்கு வந்த பின், கருப்புப் பண பதுக்கல்காரர்கள் தங்கள் பணத்தை வெளியிடும் மன்னிப்புத் திட்டங்களை அரசு அறிவித்தது. இருந்தும், கருப்புப் பண முதலைகள் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த தடாலடி நடவடிக்கை.
  பிற நாடுகளைப் போல அல்லாமல், இந்தியாவில் காகித நோட்டுப் புழக்கம் அதிகம். பொருள்கள் வாங்குவதற்கு பல்வேறு வகையான வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, காகித ரூபாய் நோட்டுகளே அதிகம் புழக்கத்தில் உள்ளன. அதாவது, 90% பரிவர்த்தனைகள் ரொக்கத்தின் அடிப்படையில் நடக்கின்றன. ரூபாய் நோட்டுக்கு மோடி வைத்த கிடுக்கிப்பிடிக்கு இதுவே காரணம். மேலும், பல்வேறு வழிகளில் சேர்த்த பணத்தை, அரசுக்குக் கணக்குக் காட்டாமல், வருமான வரி செலுத்தாமல், மனை, தங்கம் என பல்வேறு வழிகளில் முதலீடு செய்கின்றனர். 2013-ஆம் ஆண்டு கணக்குப்படி, மொத்த மக்கள்தொகையில் வருமான வரி செலுத்துவோர் 1% பேர் மட்டுமே. மற்றவர்களில் பெரும்பாலானோர் அவற்றை கருப்புப் பணமாக முடக்குகின்றனர், முடக்கியுள்ளனர்.
  குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் கருப்புப் பணப் புழக்கம் அதிகமாக உள்ளது. மேலும், இங்கு ரூ.1,000 நோட்டுகளே அதிகம் புழங்குவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை நிழல் பொருளாதாரம் அல்லது கருப்பு பொருளாதாரம் என்று சொல்லலாம். அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவிகித அளவுக்கு இவற்றின் புழக்கம் உள்ளது. இந்த கருப்புப் பணப் புழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம்.
  மேலும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் மோடியின் முக்கிய நோக்கமாகும். அதாவது, ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு 50% வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2013-ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி இனங்கள் மூலம் கிடைத்த வருவாய் 17% மட்டுமே. உலகின் பணக்கார நாடுகளின் வரி வருவாய் சராசரியாக 34%. அதனால், இந்தியக் குடிமகன்களில் பெரும்பாலானோரை வரி இனங்களுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது மோடி அரசின் திட்டமாகும். வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காகவே ஆதார் அட்டை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரித் திட்டமும் (ஜி.எஸ்.டி.) இதன் ஒரு பகுதியே. வரி ஏய்ப்பைக் குறைத்து, வரி இனங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு நன்மை பயக்கும். வரி இனங்களின் மூலம் அதிக வருவாய் கிடைக்குமானால், அவற்றைக் கொண்டு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும். அனைத்து தரப்பு மக்களும் பயனடைவர் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
  பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், பணவீக்க விகிதமும் குறைந்துள்ளது. மேலும், தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக பணப்புழக்கம் இருந்தது. தற்போது பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதில் சுணக்கம் ஏற்படும். அதனால், குடியிருப்புகள், மனைகள் விலை குறைய வாய்ப்புண்டு. இதனால், நியாயமான விலைக்கு வீடுகள், மனைகள் வாங்க முடியும். மேலும், ரியல் எஸ்டேட் துறை எழுச்சி பெறும். இதன் மூலம் வேலைவாய்ப்புப் பெருகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  தற்போது ஆடம்பர மற்றும் சில்லறை விற்பனைப் பொருள்கள் விற்பனை அனைத்தும் ரொக்கப் பரிமாற்றம் மூலமே நடக்கிறது. தற்போது அதற்கும் பாதிப்பு. வருங்காலங்களில் ரொக்கப் பரிமாற்றம் என்பது குறைவாகவே இருக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.
  உரிய திட்டமிடல் இல்லாததுதான் தற்போது எழுந்துள்ள பணப் பிரச்னைக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இன்னும் பொதுமக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. மக்களை சாந்தப்படுத்துவது மோடியின் கையில்தான் உள்ளது. எப்படி சமாளிக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai