Enable Javscript for better performance
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிவு- Dinamani

சுடச்சுட

    

    சென்ற ஜூலை மாத இறுதி நிலவரப்படி தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 105.88 கோடியாக குறைந்தது என இந்திய தொலைத்தொடர்புத் துறை ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்தது.
    இதுகுறித்து அந்த ஆணையம் அக்.7-ஆம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
    ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கணிசமாக இழந்ததையடுத்து சென்ற ஜூலையில் வயர்லெஸ் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 103.42 கோடியாக இருந்தது. கடந்த ஜூன் மாத வாடிக்கையாளர் எண்ணிக்கையான 103.51 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9 லட்சம் குறைவாகும்.
    லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இதே கால அளவில் 0.13 சதவீதம் குறைந்து 2.46 கோடியாக இருந்தது.
    ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை (லேண்ட்லைன் மற்றும் செல்லிடப்பேசி) சென்ற ஜூலையில் 105.98 கோடியிலிருந்து 1.01 சதவீதம் குறைந்து 105.88 கோடியாக காணப்பட்டது. சென்ற ஜூலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 32.4 லட்சம் வாடிக்கையாளர்களையும், டாடா டெலிசர்வீசஸ் 6,96,325 வாடிக்கையாளர்களையும், சிஸ்டமா 2,28,626 வாடிக்கையாளர்களையும் இழந்தன.
    அதேசமயம், பார்தி ஏர்டெல் நிறுவனம் நிகர அளவில் 10.7 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொண்டது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 25.68 கோடியாக அதிகரித்தது.
    வோடஃபோன் நிறுவனத்தில் 3,26,248 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்ததையடுத்து அதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 19.97 கோடியாக உயர்ந்தது. ஐடியா நிறுவனமும் புதிதாக 2,56,170 வாடிக்கையாளர்களை கவர்ந்ததையடுத்து அந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 17.64 கோடியாக அதிகரித்தது. மேலும், ஏர்செல் நிறுவனம் 4,03,603 வாடிக்கையாளர்களையும், டெலிநார் 19,049 வாடிக்கையாளர்களையும், பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் முறையே 11.70 லட்சம் மற்றும் 6,730 வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்துக் கொண்டுள்ளன.
    சென்ற ஜூலை மாத நிலவரப்படி பிராட்பேண்ட் சேவை பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 15.98 கோடியிலிருந்து அதிகரித்து 16.69 கோடியாக காணப்பட்டது. மேலும், சென்ற ஜூனில் 83.20-ஆக இருந்த தொலைத் தொடர்பு பரப்பு ஜூலையில் 83.04-ஆக குறைந்துள்ளதாக தொலைத் தொடர்புத் துறை ஒழுங்காற்று ஆணையம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai