Enable Javscript for better performance
ரூ.13,672 கோடிக்கு அலைக்கற்றை வாங்கியது ரிலையன்ஸ் ஜியோ- Dinamani

சுடச்சுட

    
    jio

    வியாழக்கிழமை வரை நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 13,672 கோடி மதிப்பில் 269.2 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையைக் கையகப்படுத்தியது.
    இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ரிலையன்ஸ் ஜியோ ஏற்கெனவே நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் விதத்தில் 22 வட்டங்களிலும் அலைக்கற்றையைக் கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த அலைக்கற்றை ஏலத்தில் 800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் ரூ. 3,623 கோடிக்கு அலைக்கற்றை கையகப்படுத்தப்பட்டது. 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் ரூ. 2,154 கோடிக்கும், 2300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் ரூ. 7,895 கோடிக்கும் அலைக்கற்றை கையகப்படுத்தப்பட்டது. இவற்றின் மூலம் 2ஜி மற்றும் 4ஜி அடிப்படையிலான சேவைகளை அளிக்க முடியும். நாட்டின் 22 தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கூடுதல் அலைக்கற்றையைக் கையகப்படுத்தியுள்ளோம். நிறுவனத்தின் கை வசம் இப்போது மொத்தமாக 1,108 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை உள்ளது. சராசரியாக அடுத்த 16 ஆண்டுகளுக்கு இவற்றின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ இடையூறின்றி சேவை வழங்க இயலும். இதையடுத்து, இணையதள அடிப்படையிலான எங்களது நாடு தழுவிய சேவை மேலும் வலுவடைந்துள்ளது. இதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு சேவையை ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
    குறைந்த கட்டணத்தில் இணைய வசதி வாயிலாகவே குரல் அழைப்புகளையும் அளிக்கும் நாடு தழுவிய அளவிலான சேவையை ரிலையன்ஸ் ஜியோ அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, ஏற்கெனவே சேவை அளித்து வந்த நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களைக் குறைப்பதாக அறிவித்தன. இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள அலைக்கற்றை ஏலத்தில் மேலும் அலைக்கற்றையை ரிலையன்ஸ் ஜியோ கையகப்படுத்தியுள்ளது.
    அண்மையில் நடைபெற்ற ஏலத்தில் வோடஃபோன் இந்தியா ரூ.20,280 கோடிக்கு பல்வேறு அலைவரிசைகளில் அலைக்கற்றையை வாங்கியது. நாட்டில் 17 வட்டங்களில் சராசரியாக அடுத்த 20 ஆண்டுகளுக்கு இதன் மூலம் 4ஜி சேவை அளிக்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. பல்வேறு அலைவரிசைகளில் பார்தி ஏர்டெல் ரூ.14,244 கோடிக்கும், ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.12,798 கோடிக்கும் அலைக்கற்றை வாங்கின.
    இந்த ஏலத்தில் 2,354 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 964.80 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்பனையாகியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai