Enable Javscript for better performance
ரூ.19,800 கோடி இழப்பு ஏற்படும்: சாம்சங் கணிப்பு- Dinamani

சுடச்சுட

    
    Samsung

    கேலக்ஸி நோட் 7 தீப்பிடிப்பு விவகாரத்தால் அடுத்த இரண்டு காலாண்டுகளில் ரூ.19,800 கோடி (300 கோடி டாலர்) அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
    சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 வகை ஸ்மார்ட்ஃபோன்களில் பேட்டரி வெடிப்பதாக எழுந்த புகாரை அடுத்து அந்த மாடல் செல்லிடப்பேசிகளை முழுமையாக சந்தையிலிருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.
    இதையடுத்து, மூன்றாவது காலாண்டில் சாம்சங் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.15,810 கோடியாக (230 கோடி டாலர்) சரியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
    பண்டிகை கால விற்பனை அதிக அளவில் இருக்கும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இரண்டு காலாண்டுகளில் மட்டும் இப்பிரச்னை காரணமாக சாம்சங் நிறுவனத்துக்கு ஏற்படும் லாப இழப்பு ரூ.19,800 கோடியாக இருக்கும்.
    எனினும், கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் உள்ளிட்ட மாடல்களின் விற்பனையை அதிகரித்து இழப்பை ஓரளவுக்கு ஈடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் ரூ.6,457 கோடி வருவாய் இழப்பு
    கேலக்ஸி நோட் 7 விவகாரத்தால் இந்தியாவில் மட்டும் சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.6,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சி.எம்.ஆர். ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அந்த ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
    இந்தியாவில் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோனை சாம்சங் நிறுவனம் சென்ற ஜூலையில் ரூ.59,900 விலையில் அறிமுகம் செய்தது. எனினும், பல்வேறு நாடுகளில் இந்த வகை ஸ்மார்ட்போன்கள் தீப்பிடிப்பதாக எழுந்த புகாரையடுத்து இந்தியாவில் அதன் விற்பனை நிறுத்தப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.
    இதன் எதிரொலியாக, இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் செல்லிடப்பேசி விற்பனை நடப்பு ஆண்டில் 40 லட்சம் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அந்த நிறுவனத்துக்கு ரூ.6,457 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் வருவாய் 46 சதவீதம் அதிகரித்து ரூ.45,446 கோடியாக இருக்கும் என்று சாம்சங் தெரிவித்திருந்தது.
    ஆனால், கேலக்ஸி நோட் 7 விவகாரத்தால், இந்தியாவில் அந்த நிறுவனத்தின் வருவாய் 25 சதவீதம் அளவே அதிகரித்து ரூ.38,989 கோடியாக இருக்கும் என்று சி.எம்.ஆர். ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai