3 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு மும்முரம்
By DIN | Published on : 04th February 2017 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மத்திய அரசு 3 பொதுத் துறை நிறுவனங்களின் பெரும்பான்மையான பங்குகளை விற்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர, நான்கு பொதுத் துறை நிறுவனங்களை இணைக்கவும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. சிபிஎஸ்இ-எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு எனப்படும் முதலீட்டு நிதியத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்காக, பொதுத் துறை நிறுவனங்களை ஒருங்கிணைப்பது, கையகப்படுத்துவது மற்றும் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
அதன் எதிரொலியாக, பாரத் பம்ப்ஸ் & கம்ப்ரஸர் உள்ளிட்ட மூன்று பொதுத் துறை நிறுவனங்களின் பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
பாரத் பம்ப்ஸ் & கம்ப்ரஸர் நிறுவனத்தில் கொண்டுள்ள 100 சதவீத பங்குகளையும் விற்று நிர்வாக மேலாண்மையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அலாகாபாதைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் பங்கு விற்பனை திட்டத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அமைச்சரவைக் குழு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலிய சுத்திகரிப்பு, உரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்குத் தேவையான சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் கனரக குழாய்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனமான பிரிட்ஜ் & ரூஃப் நிறுவனத்தின் 99.53 சதவீத பங்குகளையும் விற்று நிர்வாக கட்டுப்பாட்டை கைவிடுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த நிறுவனம், மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இவை தவிர, ஹிந்துஸ்தான் ஃப்ளூரோகார்பன்ஸில் ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனம் வைத்துள்ள 56.43 சதவீத பங்குகளை விற்பது குறித்தும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஹிந்துஸ்தான் பிரீஃபேப், என்ஜினியரிங் புராஜக்ட்ஸ், ஹெச்எஸ்சிசி மற்றும் நேஷனல் புராஜக்ட்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் ஆகிய நான்கு பொதுத் துறை நிறுவனங்களை இணைக்கவும் மத்திய நிதி அமைச்கம் திட்டமிட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக வரும் நிதி ஆண்டில் ரூ.15,000 கோடி திரட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.