Enable Javscript for better performance
பங்குச் சந்தைகளில் தொடர் விறுவிறுப்பு- Dinamani

சுடச்சுட

    
    sensex

    இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
    மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, வாரத்தின் தொடக்கத்தில் பங்கு வர்த்தகத்தில் மந்த நிலை நிலவியது.
    இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி இருந்தன. இதையடுத்து, முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
    பட்ஜெட்டில் காணப்பட்ட, நிதி சீரமைப்பு நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கான வரி விதிப்பில் தெளிவான நிலைப்பாடு, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம், உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஆகியவை பங்குச் சந்தையின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இதனால், கடந்த வாரத்தில் சென்செக்ஸ் நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் உச்சத்தைத் தொட்டது.
    இவை தவிர, தயாரிப்பு துறை உற்பத்தி அதிகரிப்பு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தாதது, ரூபாய் மதிப்பு அதிகரிப்பு, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டு வரத்து அதிகரிப்பு உள்ளிட்டவையும் பங்கு வர்த்தகத்துக்கு வலுச் சேர்த்தன.
    கடந்த வாரத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.2,334.96 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
    ரியல் எஸ்டேட் துறை பங்குகள் முதலீட்டாளர்களின் முதல் விருப்பத்தேர்வாக அமைந்ததையடுத்து அத்துறை நிறுவனப் பங்குகளின் விலை சராசரியாக 5.14 சதவீதம் வரை அதிகரித்தது.
    அதைத் தொடர்ந்து, பொறியல் பொருள்கள் துறை பங்குகளின் விலை 4.16 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள்கள் துறை பங்குகள் 3.38 சதவீதமும், வங்கி 2.53 சதவீதமும், மருந்து 1.84 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 1.10 சதவீதமும் ஏற்றமடைந்தன.
    ஹெச்1பி விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்ததைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர்.
    அதன் எதிரொலியாக, தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை 1.88 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.
    மின்சாரம், மோட்டார் வாகனம், எண்ணெய்-எரிவாயு துறை நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
    நிறுவனங்களைப் பொருத்தமட்டில், பார்தி ஏர்டெல் பங்கின் விலை அதிகபட்சமாக 9.34 சதவீதம் அதிகரித்தது. இதுதவிர, ஐடிசி (5.81%), சிப்லா (4.84%), டாக்டர் ரெட்டீஸ் (4.76%), பாரத ஸ்டேட் வங்கி (4.09%), ஆக்சிஸ் வங்கி (3.57%), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (3.44%), மாருதி சுஸுகி (3.32%), கோல் இந்தியா (2.92%), எல் & டி (2.76%) நிறுவனப் பங்குகளின் விலையும் கணிசமான அளவில் உயர்ந்தன.
    அதேசமயம், டிசிஎஸ் பங்கின் விலை 5.27 சதவீதம் சரிந்தது. டாடா மோட்டார்ஸ் 4.01%, என்.டி.பி.சி. 2.77%, விப்ரோ 2.02%, ஓ.என்.ஜி.சி. 1.76%, பஜாஜ் ஆட்டோ 1.51%, பவர்கிரிட் 1.42% நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது.
    மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 358 புள்ளிகள் (1.28%) அதிகரித்து 28,240 புள்ளிகளாக நிலைத்தது.
    இப்பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.17,047.57 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
    தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 99.70 புள்ளிகள் (1.15%) உயர்ந்து 8,740 புள்ளிகளாக நிலைத்தது.
    இப்பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,29,260.76 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
    வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிப்பதில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai