Enable Javscript for better performance
இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு!- Dinamani

சுடச்சுட

    
    saving

    முறையாக சேமிக்கும் பழக்கம் என்பது எதிர்காலத் தேவைக்கு உதவுவதோடு, தற்காலத்தில் நாம் செலுத்த வேண்டிய வருமான வரியில் சலுகை பெறவும் பயன்படும்.
    நாம் செலுத்த வேண்டிய வருமான வரியில் சலுகை பெறும் விதமாகப் பல்வேறு சேமிப்பு அல்லது முதலீட்டுத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
    இந்திய வருமான வரிச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ், சலுகைகளின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதில் மிகவும் அடிப்படையான பிரிவாக 80-சி பிரிவைக் கூறலாம்.
    இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1.50 லட்சம் வரை சேமித்து, உரிய வருமான வரி விலக்கு பெறலாம்.
    ஆயுள் காப்பீட்டுக்கு செலுத்திய பிரீமியம் தொகை, கல்விக் கட்டணம், நாம் பணிபுரியும் அலுவலகத்தின் மூலம் வருங்கால வைப்பு நிதியில் செலுத்திய தொகை, அல்லது தபால் நிலையங்களில் தொடங்கக் கூடிய பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தும் தொகை - இவற்றை சமர்ப்பித்து 80-சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை பெறலாம்.
    வீட்டு வசதிக் கடன் பெற்று ஆண்டுக்கு ரூ. 50,000 வட்டி செலுத்துபவர்கள் அதையும் 80-சி பிரிவின் கீழ் தாக்கல் செய்து வரிச் சலுகை கோரலாம். மேலே குறிப்பிட்ட ரூ. 1.50 லட்சத்துக்கும் கூடுதலாக இதனைப் பெறலாம்.
    பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கு முதலீட்டுடன் தொடர்புடைய சேமிப்புத் திட்டங்களில் (இ.எல்.எஸ்.எஸ்.) செய்யப்படும் முதலீடுகளும் வரிச் சலுகையைப் பெற்றுத் தரும்.
    வீடு பத்திரப் பதிவுத் தொகை, அதற்கான முத்திரைக் கட்டணம், வீட்டு வசதிக் கடனாகப் பெற்ற தொகையில் திருப்பிச் செலுத்தப்பட்ட அசல் தொகை இவற்றையும் வருமான வரி விலக்கு பெறுவதற்காகப் பயன்படுத்தலாம்.
    தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (என்.எஸ்.ஸி.), சுகன்யா ஸம்ருத்தி திட்டம் ஆகியவற்றில் செலுத்தும் தொகையையும் வருமான வரி விலக்குக்குப் பயன்படுத்தலாம்.
    ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதி ஆண்டில் பிள்ளைகளின் பள்ளிக் கல்விக் கட்டணம், கல்லூரி கல்விக் கட்டணம் இவற்றை 80-சி பிரிவின் சலுகை பெறுவதற்காக பயன்படுத்தலாம்.
    பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளில் செலுத்தும் கட்டணங்கள்தான் வரிச் சலுகை வரம்புக்குள் வரும். "ப்ரீ-ஸ்கூல்', "ப்ளே-ஸ்கூல்' ஆகியவற்றில் செலுத்தும் கல்விக் கட்டணத்துக்கும் 80-சி பிரிவின் கீழ் சலுகை உண்டு.
    டுடோரியல், தனியார் டியூஷனுக்கு இது பொருந்தாது. டியூஷன் கட்டணம் எனப்படும் கல்விக் கட்டணம் மட்டுமே இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதர கட்டணங்களுக்கு வரிச் சலுகை கிடையாது.
    கல்விக் கடன் பெற்று உங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால், அதற்கான வட்டியை செலுத்தி வருவீர்கள். அந்த வட்டித் தொகையின் அடிப்படையில் வருமான வரிச் சலுகை பெறுவதற்குத் தனிப் பிரிவு உள்ளது.
    நாம் பணிபுரியும் இடத்தில் வருங்கால வைப்பு நிதிக்கான பிடித்தம் இருந்தால் இந்தப் பிரிவின் கீழ் அந்தத் தொகைக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
    பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்.) செலுத்தும் முழுத் தொகையும் 80-சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற உதவும்.
    தபால் துறையின் வருங்கால வைப்பு நிதியான பி.பி.எஃப். 15 ஆண்டு காலத் திட்டமாகும். பதினைந்து ஆண்டு காலம் நிறைவடைந்த பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு இதனை நீட்டித்துக் கொள்ளலாம்.
    5 ஆண்டு முதிர்வுக் காலம் உடைய தேசிய சேமிப்பு பத்திரங்களில் (என்.எஸ்.ஸி.) முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம்.
    பங்குடன் தொடர்புடைய சேமிப்புத் திட்டம் (இ.எல்.எஸ்.எஸ்.) பரஸ்பர நிதி நிறுவனங்கள் நடத்தும் திட்டம். நமது சேமிப்புகள் பங்குச் சந்தையில் ஈடுபடுத்தப்பட்டு நமக்கு வருவாயை ஈட்டித் தருகிறது. திட்டத்தில் சேர்ந்த பிறகு, 3 ஆண்டுகளுக்கு விலக முடியாது.
    இந்தத் திட்டத்தின் கீழ் நிதி ஆண்டில் செலுத்தும் மொத்தத் தொகையும் 80-சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை பெற உதவும்.
    ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியம், வருங்கால வைப்பு நிதி, பி.பி.எஃப்., என்.எஸ்.ஸி., கல்விக் கட்டணம் என அனைத்துத் தொகையும் சேர்த்து ரூ. 1.50 லட்சம் வரை இருக்க வேண்டும்.
    மருத்துவக் காப்பீடு செய்திருந்தால், அதற்காக நீங்கள் செலுத்திய பிரீமியம் தொகைக்கு 80-டி பிரிவில் வருமான வரி சலுகை பெறலாம்.
    மருத்துவச் செலவுகளுக்கு 80-டிடி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.
    வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள டெபாசிட் தொகைக்கு அளிக்கப்படும் வட்டிக்கு 80-டிடிஏ பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு.
    கூட்டுறவு வங்கி, தபால் சேமிப்பு வங்கிக் கணக்கில் பெறும் வட்டிக்கும் இந்த சலுகை பொருந்தும். 80-டிடிஏ பிரிவின் கீழ் ரூ. 10,000 வரை சலுகை பெற இயலும்.
    வரிச் சலுகைக்காக மட்டும் சேமிக்காமல், நீண்ட காலத் தேவைக்காக சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai