Enable Javscript for better performance
வரி ஏய்ப்பும் வரி தவிர்ப்பும்- Dinamani

சுடச்சுட

    
    tax

    நாட்டில் மிகப் பெரும்பான்மையானவர்கள் ஒழுக்கத்தையும் அறத்தையும் விரும்புபவர்களாகவே உள்ளனர் என்றாலும், வரி கொடாமல் பரிமாற்றம் செய்யப்படும் கள்ளப் பணத்தைக் கையாள்வதோ, அரசு விதிக்கும் வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பதோ அவர்களின் மனசாட்சியை உறுத்தவே இல்லை என்பதுதான் உண்மை. வரி ஏய்ப்பு செய்வது அதர்மம், அநியாயமானது, சமூகத்துக்கு எதிரானது என்ற எண்ணம் நாட்டு மக்கள் மனதில் எழவேயில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
    வரி கொடாமை என்பது அரசையும் நமது சமூகத்தையும் ஏமாற்றுவதாக கருத முடியாது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.
    "அதே வேளையில் வரி செலுத்தாமல் தவிர்ப்பது புத்திசாலித்தனம்' என்ற எண்ணமும் பலரின் மனதில் உள்ளது.
    "வரியை முறையாகச் செலுத்துவது விவேகமற்ற செயல். வரி செலுத்தாமல் சாதுரியமாகத் தப்பிவிடுபவன் புத்திசாலி' என்ற எண்ணம் கூட பலர் மனதில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
    வரி செலுத்தாமல் இருப்பது சமூக நெறிகளுக்குப் புறம்பான செயல் அல்ல என்ற எண்ணம் பரவலாக இருப்பதனால், சட்ட நியாயங்களுக்குப் பணிந்து நிற்கும் சாதாரண பொதுமக்களைக் கூட "வரி செலுத்தாமல் இருக்கலாமா' என்று குழம்ப வைத்துவிடுகிறது.
    நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமான வரி போன்ற நேரடி வரியின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதே இந்த நிலையை நிரூபிக்கும்.
    பொதுமக்களை வரி ஏய்ப்பாளர்கள் என்று முத்திரை குத்த முடியாது என்றாலும், வரித் தவிர்ப்பாளர்கள் என்று கூறலாம். வரி ஏய்ப்புக்கும் வரித் தவிர்ப்புக்கும் உள்ள இடைவெளி மிகக் குறுகியது.
    வரி செலுத்துதலைத் தவிர்க்கும் போக்கின் ஒரு விளைவு, முறையாக வரி செலுத்தும் சிறு எண்ணிக்கையிலான மக்கள், நாட்டில் எல்லாருக்குமாக சேர்த்து சமூகப் பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கிறது.
    இந்த விவகாரம் புள்ளிவிவர ஆதாரத்தோடு மத்திய அரசின் கையில் உள்ளது என்பது நிதி அமைச்சர் ஜேட்லியின் பட்ஜெட் உரையிலேயே வெளிப்பட்டது.
    நாட்டின் அமைப்பு சார்ந்த தொழில் துறையில் சுமார் 4.2 சதவீத மக்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் அவர்களில் 1.74 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் வருமான விவரத்தை வருமான வரித் துறையினரிடம் முறையாகத் தாக்கல் செய்கின்றனர். இது தனி நபர்களின் நிலை.
    நமது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சிறு தொழில், தனி நபர் தொழில் புரிவோர் 5.6 சதவீத அளவில் உள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் இந்தப் பிரிவினரில் முறையாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 1.81 கோடிதான். அதாவது, அங்கேயும் சமூகப் பொறுப்போடு செயல்படுவோரின் எண்ணிக்கை குறைவுதான்.
    இந்த விவகாரத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பொது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
    2014-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் 13.94 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. நடப்பு நிதி ஆண்டில் வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 5.97 லட்சம் நிறுவனங்கள்.
    அதிலும் 2.76 சதவீத நிறுவனங்கள் நஷ்டத்தில் நடப்பதாகவோ, லாபமே ஈட்டவில்லை என்றோ கூறியுள்ளன. மேலும், 2.85 லட்சம் நிறுவனங்கள் வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 1 கோடிக்கும் குறைவாக ஈட்டியதாகக் கூறிக் கொண்டன.
    ரூ. 1 கோடி முதல் ரூ. 10 கோடி வரை லாபம் ஈட்டியதாக 28,667 நிறுவனங்கள் தெரிவித்தன. வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 10 கோடிக்கும் மேல் ஈட்டியதாக தெரிவித்த நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் 7,781. அமைப்பு சார்ந்த தொழில் துறையே இப்படியென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
    அமைப்பு சாரா தொழில் துறையில் பணியாற்றிப் பிழைப்பவர்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருந்தும் அரசுக்கு ஏன் முறையான வரி வருவாய் கிடைப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
    2015-16 நிதி ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்த தனி நபர்களின் எண்ணிக்கை 3.7 கோடி. இதில் 99 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக சம்பாதிப்பதாகத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லாதவர்கள். ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களின் எண்ணிக்கை 1.95 கோடி. ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருடாந்தர வருமானம் உள்ளோர் 52 லட்சம் பேர். ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 24 லட்சம். ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டுதோறும் சம்பாதிப்பவர்களில் 56 லட்சம் பேர் மாத வருமானம் உள்ளவர்கள். ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்துக்கும் மேல் ஊதியம் பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை 1.72 லட்சம்.
    யார் எந்தப் பிரிவில் இருந்தாலும், சொத்து சேர்க்கும் நடவடிக்கையிலும், கேளிக்கையிலும் குறைவே இல்லை. நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 1.25 கோடி கார்கள் விற்பனையாகியுள்ளன. வேலை நிமித்தமாகவோ, இன்பச் சுற்றுலாவாகவோ 2015-ஆம் ஆண்டு மட்டுமே வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2 கோடி. அதற்கெல்லாம் பணம் வைத்துள்ள நபர்கள், வரி செலுத்தும்போது மட்டும் திடீர் ஏழைகளாகிவிடுகின்றனர். இனி மற்றொரு புள்ளிவிவரத்தைப் பார்க்கலாம்.
    உயர் மதிப்பு கரன்சி செலாவணியாகாது என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல், 1.09 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ. 2 லட்சம் முதல், ரூ. 80 லட்சம் வரை பழைய 500,1000 கரன்சி செலுத்தப்பட்டது. சராசரியாக ஒரு வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 5.03 கோடி டெபாசிட் வைத்திருந்தவர்கள் இவர்கள்.
    அதே சமயத்தில், 1.48 லட்சம் வங்கிக் கணக்குகளில் ரூ. 80 லட்சத்துக்கும் அதிகமாக, பணம் செலுத்தியவர்கள் உண்டு. இந்த ரகத்தில் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும், சராசரியாக ரூ. 3.31 கோடி டெபாசிட் ஆயிற்று.
    தற்போது வங்கிகள் வசமுள்ள தகவல்களை மிகத் தீவிரமாக ஆய்வு செய்தால், இத்தனை காலமும் வருவாயை மறைத்தவர்களின் விவரங்கள் வெளிப்படும். போனது போகட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட, இனிமேல் காட்டப்படும் வருவாய்க்கு ஏற்ப வரி செலுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது. இணைய வழி வணிகம் மூலம், குறைந்தபட்ச வரி வரையறைக்குள் எல்லாருமே வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது. உயர் மதிப்பு கரன்சி செல்லாது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே, அதனை விமர்சித்து கருத்துகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. அரசியல் காரணங்களுக்காக அதனைக் குறை கூறுபவர்களை ஒதுக்கிவிடலாம். ஆனால் உள்நாட்டில் பதுக்கப்பட்டிருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள், மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் வெளியே வந்துவிட்டது என்பது தெளிவு.
    நாட்டின் மொத்த பணப் புழக்கத்தில் 86 சதவீத அளவு கரன்சி தற்போதைய மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக சுழற்சியிலிருந்து நீக்கப்பட்டு, வங்கிகளில் செலுத்தி முறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கிட்டத்தட்ட அனைத்து தொழில் பிரிவினரும் வங்கி மற்றும் முறைப்படுத்தப்பட்ட வரையறைக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் குறைந்தபட்சமாக சரியான வருவாயை வெளிப்படுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் குறிப்பிடத் தக்க வெற்றி இது என்று கூறலாம்.

    ரொக்கம் - வரி தவிர்ப்புக்கு வழி

    நாட்டில் பெரும்பாலும், ரொக்க பரிவர்த்தனை செய்து கொள்பவர்கள்தான் அதிகம்.
    இந்தியர்கள் பொதுவாக சட்ட, விதிமுறைகளுக்கு இணக்கமாகச் செயல்படுபவர்கள் என்றாலும், ரொக்கப் பரிவர்த்தனை முறையானது வரி செலுத்தாமல் தப்பித்துக் கொள்ள உதவுகிறது.
    வரி செலுத்தாததன் விளைவு என்ன? அரசு எதிர்பார்க்கும் வருவாய் அரசுக்கு கிட்டாமல் போய்விடுகிறது. தற்போதைய பொருளாதார நிலையில், போதிய அளவு தனியாரின் முதலீடுகள் இல்லை. பல்வேறு உள்நாட்டு, சர்வதேசப் பொருளாதாரக் காரணங்களால் பெரு நிறுவனங்களுக்கும் போதிய வருமானம் இல்லை. வங்கிகளில் வாராக் கடன் தொல்லை. இவை எல்லாமாகச் சேர்ந்து அரசு திட்டமிட்டபடி, வருவாய் ஈட்ட முடிவதில்லை.
    ஆனால் உயர் மதிப்பு கரன்சி விவகாரத்தால் விளைந்த கூடுதல் நன்மை இப்போதுதான் வெளிப்படுகிறது. கள்ள நோட்டு ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு கிடைத்து வரும் நிதி ஆதரவு முடக்கம் என்பதெல்லாம் சரிதான். ரூ.500, ரூ.1000 கரன்சி நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், ஏராளமான நிறுவனங்கள், அமைப்புகள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் நவீன இணைய வழி பரிவர்த்தனை முறைக்குத் தாவிவிட்டனர். இதனால் வங்கிகள் வழியாக மட்டுமே பண சுழற்சி நடைபெறும் நிலை எழுந்துள்ளது. பணம் உருவாகும் இடத்திலிருந்து அது கைமாறும் ஒவ்வொரு கட்டத்தையும் பின் தொடர்ந்து, கண்காணிக்கும் வகையில் நிலைமை மாறியுள்ளது. தனி நபர் மற்றும் வணிக வருமானம் முழுவதும் கண்காணிப்புக்கு உள்ளாகும். அனைத்து கட்டங்களிலும் குறைந்தபட்ச வரியையாவது பெற்றுத் தரும். இது வரி வருவாயை அதிகரிக்கச் செய்யும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai