Enable Javscript for better performance
முகவர்களுக்கான பணிக்கொடை: ரூ.3 லட்சமாக உயர்த்தியது எல்.ஐ.சி.- Dinamani

சுடச்சுட

    

    முகவர்களுக்கான பணிக்கொடை: ரூ.3 லட்சமாக உயர்த்தியது எல்.ஐ.சி.

    By DIN  |   Published on : 07th February 2017 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    LIC

    முகவர்கள் பணியிலிருந்து விலகுவதை தவிர்க்கவும், அவர்களை மேலும் ஊக்குவிக்கவும் அவர்களுக்கான பணிக்கொடை தொகையை எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.3 லட்சமாக அதிகரித்துள்ளது.
    எல்.ஐ.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முகவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அந்த வகையில் 11 லட்சம் முகவர்கள் மூலம் எல்.ஐ.சி. நிறுவனம் 94 சதவீத பிரீமியம் வருவாயைப் பெற்று வருகிறது. ஆனால், அதற்கு போட்டியாக விளங்கும் தனியார் துறை நிறுவனங்களில் முகவர்களின் பங்களிப்பு அதில் பாதி அளவுக்கே உள்ளது.
    கடந்த நிதி ஆண்டில் எல்.ஐ.சி. நிறுவனம் 2.45 லட்சம் முகவர்களை புதிதாக தேர்வு செய்தது. அதேசமயம், பல்வேறு காரணங்களால் 3.40 லட்சம் முகவர்கள் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி எல்.ஐ.சி.யின் முகவர்களின் எண்ணிக்கை 10.60 லட்சமாக இருந்தது.
    இதுகுறித்து எல்.ஐ.சி. நிறுவனத்தின் உயரதிகாரிகள் தெரிவித்ததாவது: நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் 2.7 லட்சம் முகவர்களை தேர்வு செய்துள்ளோம். அதேசமயம், நிறுவனத்தை விட்டு 2.25 லட்சம் முகவர்கள் வெளியேறியுள்ளனர். இதையடுத்து, நிகர அளவில் எல்.ஐ.சி.க்கு 45,000 முகவர்கள் கிடைத்துள்ளனர். நடப்பு ஆண்டு ஜனவரி நிலவரப்படி எல்.ஐ.சி. முகவர்களின் எண்ணிக்கை 11.05 லட்சம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
    எல்.ஐ.சி. நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக முகவர்களாக பணியாற்றியவர்களுக்கு ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் என்று மத்திய அரசு இதழில் வெளியான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியான அறிவிக்கையில் எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குநர் உஷா சங்வான் கையெழுத்திட்டுள்ளார்.
    தற்போதைய விதிமுறையின்படி 15 ஆண்டுகள் பணிமுடித்த முகவர்களுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே பணிக்கொடை வழங்கப்படுவது நினைவுகூரத்தக்கது. சென்ற ஜனவரி வரையிலான கால அளவில் எல்.ஐ.சி.யின் மொத்த பிரீமியம் வருவாய் ரூ.29,000 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய பிரீமியம் வருவாய் ரூ.16,460 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 76 சதவீதம் அதிகமாகும்.
    வரும் மார்ச் மாதத்துக்குள் எல்.ஐ.சி. நிறுவனம் பிரீமியம் வாயிலாக ரூ.31,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு ஏதுவாகவே, முகவர்களை ஊக்குவிக்கவே பணிக்கொடை தொகையை உயர்த்தும் நடவடிக்கையை எல்.ஐ.சி. மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai