Enable Javscript for better performance
'சிறு, குறு தொழில் கடனுக்கு அதிக முக்கியத்துவம்': இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- Dinamani

சுடச்சுட

    

    'சிறு, குறு தொழில் கடனுக்கு அதிக முக்கியத்துவம்': இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

    By DIN  |   Published on : 11th February 2017 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    IOB

    சிறு, குறு தொழில் கடன் வழங்குவது, தனி நபர் கடன் அளிப்பது, வாராக் கடன் குறைப்பது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியகுமார் தெரிவித்தார்.
    இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிறுவன தின நிகழ்ச்சிகள் சென்னையில் அதன் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியகுமார் கூறியதாவது:
    தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 3,394 கிளைகள் உள்ளன. ஹாங்காங், பாங்காக், இலங்கை, சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய இடங்களில் வங்கி கிளைகள் உள்ளன.
    வங்கியின் வர்த்தகத்தில் தமிழகம் முக்கிய பங்கை கொண்டுள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.3.6 லட்சம் கோடியாக உள்ளது.
    வாராக் கடன் பிரச்னையில் தவித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போது அதிலிருந்து மீண்டு வர ஆரம்பித்துள்ளது. வாராக் கடன் இரண்டாம் ரூ.34,724 கோடியாக இருந்தது. இது, மூன்றாம் காலாண்டில் ரூ.34,502 கோடியாக குறைந்தது.
    அதேபோல, நிகர இழப்பில் இருந்தும் வங்கி மீண்டு வருகிறது. வங்கியின் நிகர இழப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.1,450 கோடியாக இருந்தது. அது இரண்டாவது காலாண்டில் ரூ.765 கோடியாக குறைந்தது.
    தொடர்ந்து, நிகர இழப்பு குறைந்து ரூ.450 கோடியாக இருந்தது. நான்காம் காலாண்டில் வங்கி இழப்பில் இருந்து முற்றிலும் மீண்டுவிடும்.
    விவசாயக் கடன், தனி நபர் கடன், சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
    தனி நபர் கடனைப் பொருத்தவரை, வீட்டுக் கடன், வாகனக் கடன், அடமானக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
    தொழில் கடனைப் பொருத்தவரை, பல திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
    வங்கியின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை 9-10 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
    இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர்கள் ஜெயின், சேவியர் திலகராஜ் உள்பட பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai