Enable Javscript for better performance
அதிகரிக்கும் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை!- Dinamani

சுடச்சுட

    
    lanbori

    நிலையான இறக்குமதி கொள்கையால் நடப்பு ஆண்டில் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை அமோகமாக இருக்கும் என லம்போர்கினி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இத்தாலியைச் சேர்ந்த லம்போர்கினி நிறுவனம், ஹராகேன் ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.3.45 கோடியாகும்.
    மேலும், ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களுக்காக இந்த நிறுவனம் "அவண்டேட்டர்' உள்ளிட்ட இரண்டுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.
    இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் அதிகரித்துள்ளதுடன், பெண் வாடிக்கையாளர்களின் கவனமும் ஸ்போர்ட்ஸ் ரக கார்களின் பக்கம் திரும்பியுள்ளது என்கிறார் லம்போர்கினி இந்தியா நிறுவனத்தின் தலைவர் சரத் அகர்வால்.
    முந்தைய 2011-2015 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கார் இறக்குமதி வரி விதிப்பு முறைகளில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக, விற்பனை பாதிக்கப்பட்டது.
    ஆனால், கடந்த ஆண்டு முதல் நிலையான இறக்குமதி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பிரிவிலான கார் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, நடப்பு ஆண்டில் லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை இரண்டு மடங்கு வளர்ச்சி காணும். கடந்த ஐந்து ஆண்டுகளாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடிஎஸ், ஆடி ஆர்8 உள்ளிட்ட ரூ.2.25 கோடி விலையுள்ள ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதே சமயம், பெராரி கார் விற்பனை சரிவடைந்துள்ளது.
    முந்தைய ஆண்டுகளில் 12-15 சதவீதமாக இருந்த லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்களின் விற்பனை தற்போது 20-25 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிற ரக கார்களுடன் ஒப்பிடும்போது ஸ்போர்ட்ஸ் பிரிவிலான கார்கள் விற்பனை மிகவும் வேகமாக உள்ளது.
    முன்பு இந்த வகை கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இறுதி முடிவெடுப்பதில் காலதாமதம் செய்தனர். தற்போது அந்த நிலை மாறியுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai