Enable Javscript for better performance
ஆயுள் காப்பீடு புதிய பிரீமியம் வருவாய் விறுவிறு!- Dinamani

சுடச்சுட

    
    LIC

    ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் சென்ற ஜனவரியில் விறுவிறுப்படைந்தது.
    பரபரப்பு நிறைந்த தற்போதைய வாழ்க்கை முறையில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான தேவை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகமாக ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்ற ஜனவரி மாதத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் (ரூ.10,283 கோடி) 27.8 சதவீதம் அதிகரித்து ரூ.13,138.10 கோடியை எட்டியது.
    அதில், அநேக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி.யின் புதிய பிரீமிய வருவாய் மட்டும் ரூ.8,724.59 கோடியாக இருந்தது. மொத்த வருவாயில் இது 66.4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
    எஞ்சியுள்ள பிரீமியம் ரூ.4,413.50 கோடியை மட்டும் இத்துறையில் ஈடுபட்டுள்ள 23 தனியார் நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டன. கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.3,563.60 கோடியாக இருந்த தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் நடப்பு ஆண்டில் 23.8 சதவீதம் அதிகரித்தது.
    தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களைப் பொருத்தமட்டில், சென்ற ஜனவரியில் எஸ்.பி.ஐ. லைஃப் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் ரூ.672.07 கோடியிலிருந்து 62.7 சதவீதம் அதிகரித்து ரூ.1,094.54 கோடியாக காணப்பட்டது.
    ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைஃப் புதிய பிரீமியம் 25.3 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.775.41 கோடியாகவும், எச்.டி.எப்.சி. ஸ்டாண்டர்ட் லைஃப் வருவாய் 33.7 சதவீதம் அதிகரித்து ரூ.733.58 கோடியாகவும், மேக்ஸ் லைஃப் புதிய பிரீமியம் 2.3 சதவீதம் உயர்ந்து ரூ.235.48 கோடியாகவும் இருந்தது.
    இவை தவிர, பஜாஜ் அலையன்ஸ் (ரூ.305.99 கோடி), ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் (ரூ.85.90 கோடி), டாடா ஏ.ஐ.ஏ. லைஃப் (ரூ.105.51 கோடி), பிர்லா ஸன் லைஃப் (ரூ.153.99 கோடி) ஆகிய நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாயும் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டு ஜனவரியில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.
    அதே சமயம், கடந்த ஆண்டு ஜனவரியில் 23,60,809-ஆக காணப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசி விற்பனை எண்ணிக்கை நடப்பு ஆண்டு ஜனவரியில் 23,40,560-ஆக குறைந்தது.
    நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான கால அளவில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் ரூ.1,29,555.09 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இது ரூ.95,871.62 கோடியாக காணப்பட்டது என இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
    நிதி ஆண்டின் இறுதிகட்டம் நெருங்குவதையடுத்து, பிப்ரவரி மற்று மார்ச் மாதங்களில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் மேலும் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai