Enable Javscript for better performance
என்ன நடக்கிறது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில்- Dinamani

சுடச்சுட

    

    என்ன நடக்கிறது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில்

    By -அ. ராஜன் பழனிக்குமார்  |   Published on : 13th February 2017 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    infosys

    தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனர்களுக்கும், அதன் இயக்குநர் குழுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அண்மையில் பரபரப்பான தகவல் வெளியானது.
    இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்காவின் சம்பளம் மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய போது அவர்களுக்கு அதிக அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனர்களுக்கும், அதன் இயக்குநர் குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    இதையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனர்களான என்.ஆர். நாராயண மூர்த்தி, நந்தன் நிலகேனி, எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அதிக அளவில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்கும்படி இயக்குநர் குழுவுக்கு கடிதம் அனுப்பினர்.
    சரியான அளவில்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது என்றும், நிறுவனத்தின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் இயக்குநர்கள் குழு பதிலளித்தது.
    விஷால் சிக்காவுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் அடிப்படை சம்பளமாக ரூ.48.7 கோடியும், போனஸ் மற்றும் இதர பலன்களாக ரூ.4.5 கோடியும் வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் இந்த தொகை ரூ.74 கோடியாக அதிகரித்தது.
    அதேபோன்று, முன்னாள் தலைமை நிதி அதிகாரியான ராஜீவ் பன்சால் அண்மையில் நிறுவனத்தை விட்டு வெளியேறியபோது இழப்பீடாக 30 மாத சம்பளம் வழங்கப்பட்டது. நிர்வாகக் குழுவின் இந்த நடவடிக்கை, இன்ஃபோசிஸின் நிறுவனர்கள் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லை.
    இந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி டி.வி. மோகன்தாஸ் பய், நிறுவனத்தின் நன்மைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொத்தம் பொதுவான, வழக்கமான மேம்போக்கான அறிக்கையை வெளியிடாமல், முழு விபரங்களையும் பங்கு முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று இயக்குநர் குழுவை வலியுறுத்தியிருந்தார். இந்த நிகழ்வு, இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்குள் நிலவும் பூசலை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
    நிர்வாகக் குழு தலைவராக உள்ள ஆர்.சேஷசாயி அழுத்தமாக நிர்வாகத்தை வழிநடத்திச் செல்லவில்லை என்ற புகார் உள்ளது. தொழில் ரீதியாக நியமித்த இயக்குநர் குழுவை சுதந்திரமாகச் செயல்பட விடாமல், இன்ஃபோசிஸின் ஆரம்பகால நிறுவனர்களான நாராயணமூர்த்தி போன்றவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சில முதலீட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.
    இந்த நிலையில், மும்பையில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா பங்கேற்க உள்ளார்.
    இன்ஃபோசிஸ் நிறுவனர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் குறித்து விஷால் சிக்கா இந்தக் கூட்டத்தில் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு தாற்காலிகத் தலைவரை நியமிக்க வேண்டும் என அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
    இதனிடையே, முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுக்கும், அதன் மேல்மட்ட நிர்வாகத்துக்கும் இடையே நடைபெற்று வரும் விவகாரங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக செபி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai