Enable Javscript for better performance
மின்னணுப் பொருள்கள் இறக்குமதி ரூ.26,757 கோடி- Dinamani

சுடச்சுட

    
    printer

    சென்ற ஜனவரி மாதத்தில் மின்னணுப் பொருள்கள் இறக்குமதி ரூ.26,757 கோடியாக இருந்தது.
    தேவை அதிகரிப்பையடுத்து சென்ற ஜனவரியில் மின்னணுப் பொருள்களின் இறக்குமதி 26 சதவீதம் அதிகரித்து ரூ.26,757 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் இதன் இறக்குமதி ரூ.21,220 கோடியாக இருந்தது.
    அதே சமயம், இந்தியாவின் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.3,526.13 கோடியிலிருந்து 10 சதவீதம் சரிவடைந்து ரூ.3,162.73 கோடியாக காணப்பட்டது.
    உள்நாட்டில் மதிப்பு கூட்டப்பட்ட மின்னணுப் பொருள்களின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. இது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை.
    அதன் காரணமாகவே, செல்லிடப்பேசி, தொலைத்தொடர்பு உபகரணங்கள் ஆகியவற்றின் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. மேலும், அவைகளில் பயன்படுத்தப்படும் பாகங்களில் பெரும்பாலானவை இறக்குமதியானவை.
    டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வரும் வேளையில், பி.ஓ.எஸ். எனப்படும் பண அட்டை தேய்க்கும் இயந்திரங்களுக்கும், கைரேகை உணர் இயந்திரங்களுக்கும், பயோமெட்ரிக் ஸ்கேனர்களுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. எனவே, அவற்றின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டில் அதன் தயாரிப்பை அரசு சார்பில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
    அதே போன்று, உள்நாட்டில் செல்லிடப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க தேவையான சலுகைகளை அளித்து அதன் ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.
    கடந்த 2015-16 நிதி ஆண்டில் ரூ.54 ஆயிரம் கோடி மதிப்புக்கு செல்லிடப்பேசி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. நடப்பு 2016-17 நிதி ஆண்டில் இதன் உற்பத்தி மதிப்பு உயர்ந்து ரூ.90,000 கோடியாக உள்ளது.
    இந்தச் சூழ்நிலையில், செல்லிடப்பேசி இறக்குமதி அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படுவதுடன் உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கத் தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று ஐ.சி.ஏ. அமைப்பின் தேசிய தலைவர் பங்கஜ் மொஹிந்ரோ தெரிவித்துள்ளார்.
    செல்லிடப்பேசி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று 2017-18 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மைக், ரிசீவர், உலோகம் மற்றும் பிளாஸ்டிக், கீபேட் மற்றும் யு.எஸ்.பி. கேபிள்களுக்கான மாறுபட்ட வரிவிதிப்பு நீடிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செல்லிடப்பேசிகளின் உற்பத்தியை வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் 50 கோடியாகவும், 2019-20 ஆண்டுக்குள் ஏற்றுமதியை 12 கோடியாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
    அதன்படி, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம் கோடி மதிப்புக்கு செல்லிடப்பேசி உற்பத்தியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai