Enable Javscript for better performance
ஆதார் வழியாக செல்−டப்பேசி எண் சரிபார்ப்புக்கு ரூ.2,500 கோடி செலவு!- Dinamani

சுடச்சுட

    

    ஆதார் வழியாக செல்லிடப்பேசி எண் சரிபார்ப்புக்கு ரூ.2,500 கோடி செலவு!

    By DIN  |   Published on : 20th February 2017 02:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aadar

     

    ஏற்கெனவே உள்ள செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் தகவல்களை ஆதார் அடிப்படையில் சரிபார்க்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.2,500 கோடி செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிகளும் ஆதார் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் விவரங்களை உறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
    இதன் காரணமாக, செல்லிடப்பேசி நிறுவனங்களும் தற்போதைய வாடிக்கையாளர் தகவல்களை ஆதார் அடிப்படையில் மீண்டும் பரிசோதிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகியுள்ளன.
    செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் விவரங்களை ஆதார் அடிப்படையில் இ-கேஒய்சி மூலம் மீண்டும் சரிபார்த்துக் கொள்ளுமாறு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் கடந்த மாதம் வலியுறுத்தியது.
    இந்த நிலையில் உச்ச நீதிமன்றமும், உள்நாட்டில் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வருங்காலத்தில் செல்லிடப்பேசி சேவையில் இணைவோரின் விவரங்களை ஆதார் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
    இதனால், ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் உள்ளிட்ட செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் விவரங்களை ஆதார் அடிப்படையில் பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.
    சுமார் 100 கோடி வாடிக்கையாளர்கள் விவரங்களை இவ்வாறு சரிபார்க்க வேண்டியுள்ளது என்று இந்திய செல்லிடப்பேசி சேவ நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.) தலைமை இயக்குநர் ராஜன் மாத்யூ தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான பேரின் தகவல்களை சரிபார்ப்பதற்கு ஏராளமான ஆட்களும், பெருமுயற்சியும் அவசியமாகிறது.
    இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களுக்கு ரூ. 2,500 கோடி வரை செலவு பிடிக்கும் என்று சி.ஓ.ஏ.ஐ. மதிப்பீடு செய்துள்ளது. இதனை, தொலைத் தொடர்பு துறைக்கும் அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    ஆதார் விவரங்கள் அடிப்படையில் செல்லிடப்பேசி இணைப்புகள் கொடுக்கப்படும் வசதி நாடு தழுவிய அளவில் பரவலாக்கப்பட்டவுடன், புதிய வாடிக்கையாளர்களும் கட்டாயம் அதன் வாயிலாக மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்.
    அதே சமயம், வெளிநாட்டவர்களுக்கும், நிறுவனங்களுக்கு சொந்தமான இணைப்புகளுக்கும் ஆதாரிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும். மேலும் அழைப்பு வசதி இல்லாத ஐபேட், பண அட்டை தேய்க்கும் இயந்திரம் (பி.ஓ.எஸ்.), டேட்டா கார்ட்ஸ் உள்ளிட்ட இணைப்புகளுக்கும் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது.
    ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் உள்ளிட்ட ஆதார் பயன்பாடு அதிகம் இல்லாத மாநிலங்களில் இ-கேஒய்சியை கட்டாயமாக்க கூடாது.
    அதே போன்று, ஆதார் எண்ணுடன் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பொருந்தாமல் போனால் அபராதம் எதுவும் விதிக்க கூடாது.
    மேலும், ரீசார்ஜ் செய்யும் போது ஆதார் அட்டை அடிப்படையிலான விவரங்களை அளிக்க கோரி வாடிக்கையாளர்களை வற்புறுத்தக் கூடாது என சி.ஓ.ஏ.ஐ., மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai