மாத இறுதிக்குள் வோடஃபோன்-ஐடியா இணைப்பு உடன்படிக்கை?
By DIN | Published on : 20th February 2017 02:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வோடஃபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்பு தொடர்பான உடன்படிக்கை அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
உள்நாட்டில் தொலைத்தொடர்பு சேவை வழங்குவதில் ஏர்டெலுக்கு அடுத்தபடியாக வோடஃபோன் இந்தியா நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த வோடஃபோன்-ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களை இணைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இணைப்புக்கான இறுதி உடன்படிக்கை இம்மாதம் 24-25 தேதிகளில் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. முறையான இணைப்பு அறிவிப்பு இன்னும் ஒரு மாத காலத்துக்குள்ளாகவே வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த இணைப்பு தொடர்பான விஷயத்தில் வாய் திறக்க வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மறுத்துவிட்டன.
இந்த இணைப்பு ஒப்பந்தம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் நிலையில் இந்திய தொலைத்தொடர்பு சேவைத் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கும். தொலைத் தொடர்பு சேவைத் துறையின் மொத்த வருவாயில் அந்த நிறுவனத்தின் பங்களிப்பு 40 சதவீதமாகவும் இருக்கும். மேலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 38 கோடியை எட்டும் என்று இந்தியா ரேட்டிங்-ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.