Enable Javscript for better performance
வெளிமாநிலங்களுக்கு செல்லத் தயாராகும் பின்னலாடை முதலீடுகள்- Dinamani

சுடச்சுட

    

    வெளிமாநிலங்களுக்கு செல்லத் தயாராகும் பின்னலாடை முதலீடுகள்

    By -பெ.ஸ்ரீநிவாசன்  |   Published on : 20th February 2017 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    knitting

    திருப்பூரின் பிரதான பின்னலாடைத் தொழிலை தங்களது பகுதிகளுக்கு கொண்டு செல்ல பல்வேறு மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
    திருப்பூரைச் சேர்ந்த பெரும் உற்பத்தி நிறுவனங்கள் சில வெளி மாநிலங்களில் முதலீடு செய்ய ஏற்கெனவே தீர்மானித்துள்ள நிலையில், முதலீடு வெளி மாநிலங்களுக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்கிறது ஏற்றுமதியாளர்கள் தரப்பு.
    பருவ மழை பொய்த்து தமிழகத்தில் தற்போது வறட்சி நிலவி வரும் நிலையில், திருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை, விவசாய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், பொருளாதார ரீதியிலான பாதிப்பிலிருந்து பொதுமக்களை பின்னலாடைத் துறை பாதுகாத்து வருகிறது.
    வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பின்னலாடைத் துறை மூலமாக கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
    இந்தியாவின் பின்னலாடைத் துறை உற்பத்திக்குப் பிரதான நகரமாக உள்ள திருப்பூரில் ஜாப் ஆர்டர்களை கையாளும் நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சுமார் 10,000 பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி நடைபெறும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் நாட்டின் அன்னிய செலாவணியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    முயற்சியில் பிற மாநில அரசுகள்: திருப்பூர் பின்னலாடைத் துறையின் வளர்ச்சியைப் பார்த்து பிற மாநிலத்தவர் வியக்கும் நிலையில், தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவும் அரசியல் சூழல் காரணமாக, புதிய ஆர்டர்களை எடுக்கவும், உற்பத்தியை வேகப்படுத்தவும் இங்குள்ள உற்பத்தியாளர்கள் முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
    இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆந்திரம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் தீர்மானித்து செயல்படத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக திருப்பூரில் உள்ள ஏற்றுதியாளர்கள், கூட்டமைப்புகளை அந்த மாநில அரசு அதிகாரிகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சந்தித்துப் பேசும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
    தொழில் தொடங்க சலுகைகள்: இரு தினங்களுக்கு முன் தெலங்கானா மாநில அரசு சார்பில், அந்த மாநில தொழில் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் தலைமையிலான குழுவினர் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளை இது தொடர்பாக சந்தித்துப் பேசினர்.
    அப்போது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தெலங்கானாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு தொழில் தொடங்க, பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக முதலீட்டுக்கான மூலதன மானியம், முழு நேரமும் தொய்வில்லாத மின்சார வசதி, மின்சாரத்துக்கு குறைவான கட்டணம், இலவச கட்டட வசதி, பற்றாக்குறை இல்லாத தொழிலாளர் வசதி உள்ளிட்ட சலுகைகளையும் அறிவித்துச் சென்றுள்ளனர். அந்த அழைப்பின் பேரில் தெலங்கானாவில் தொழில் தொடங்க ஏற்றுமதியாளர்கள் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
    இதேபோல ஆந்திரம், குஜராத் அரசுகளும் தொழிலாளர்களுக்குத் தங்கும் வசதிகள், கட்டட வசதி, சிறுகுறு நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன், தொழில் தொடங்கினால் மானியம் உள்ளிட்ட சலுகைகளையும் சேர்த்து அறிவித்துள்ளன.
    வெளியேறத் தயாராகும் உற்பத்தியாளர்கள்: இத்தகைய வரவேற்பு, தமிழகத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் தங்களது புதிய முதலீடுகளை வெளிமாநிலங்களில் மேற்கொள்ள முனைப்பு காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக பலர் வெளி மாநில அரசுப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசியும் வருகின்றனர்.
    ஆனால், திருப்பூரிலிருந்து முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம்.
    இது குறித்து அவர் கூறியதாவது: நிலையற்ற அரசியல் சூழலில் புதிய ஆர்டர்களை பெறுவது குறித்து அச்சம் கொள்ளும் நிலையில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். ஆனால், வரும் ஆர்டர்களை விடவும் முடியாது என்பதாலேயே உகந்த இடங்களில் தொழில் தொடங்க ஏற்றுமதியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இதைப் பிற மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன.
    திருப்பூரில் பிரதானத் தொழிலாக உள்ள பின்னலாடைத் தொழில் தற்போதும் 40 சதவீத தொழிலாளர் பற்றாக்குறையுடனேயே இயங்கி வருகிறது. போதிய மின்சாரம் கிடைப்பதில்லை. தொழில் துறையினரின் வளர்ச்சிக்கு உகந்த சலுகைகளை மாநில அரசு வழங்குவதில்லை. இதுபோன்ற குறைபாடுகள் காரணமாகவே, தொழில் துறையினர் வேறு இடங்களுக்குச் செல்வது குறித்து யோசிக்கத் தொடங்கியுள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த பெரும் உற்பத்தியாளர்கள் சிலர் வெளி மாநிலங்களில் முதலீடு செய்ய ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர். இந்த நிலை தடுக்கப்பட வேண்டும்.
    திருப்பூரின் பிரதான பின்னலாடைத் தொழில் வெளிமாநிலங்களுக்குச் செல்லக் கூடாது. அவ்வாறு செல்லும்போது இங்குள்ள தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும். இதைத் தடுப்பதற்கு, தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவதுடன், தொழில் துறையினருக்குத் தேவையான அடிப்படை அம்சங்களை நிறைவேற்றுவதிலும், வளர்ச்சி குறித்தும் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.
     

    ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி

    திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். டையிங், பிரிண்டிங், நிட்டிங், அயர்னிங், பேக்கிங் போன்ற ஜாப் ஒர்க் மூலமாக 3.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், 2500 பின்னலாடை உற்பத்தி முதலாளிகளும், 5 ஆயிரம் ஜாப் ஒர்க் நிறுவன முதலா
    ளிகளும் இத்தொழிலில் உள்ளனர்.
    இவை தவிர, சிறிய அளவிலான ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் திருப்பூர் பின்னலாடைத் துறையின் கீழ், ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான உற்பத்தி நடைபெற்றுள்ளது.
    இதில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியும், ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டுக்கான உற்பத்தியும் நடைபெற்றுள்ளது என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் டி.ஆர்.விஜயகுமார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai