Enable Javscript for better performance
குஜராத்தில் ஹோண்டாவின் புதிய கார் ஆலை- Dinamani

சுடச்சுட

    
    Honda

    குஜராத்தில் புதிய கார் அசெம்பிளி ஆலையை அமைக்க ஹோண்டா இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யோசிரோ ஊனோ தெரிவித்தார்.
    மும்பையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
    குஜராத்தின் விட்டலபூர் பகுதியில் ஹோண்டா நிறுவனத்தின் கார்களை உருவாக்கும் புதிய அசெம்பிளி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக 380 ஏக்கர் பரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய விற்பனை நிலையைக் கணக்கில் எடுக்காமல், எதிர்காலத்தை மனதில் வைத்தும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்தக் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம்.
    இந்தியாவில் இதுவரை சுமார் ரூ. 8,000 கோடி முதலீடு செய்துள்ளோம்.
    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு நாட்டில் ஏற்கெனவே புது தில்லி அருகே நொய்டாவிலும், ராஜஸ்தானில் தபுகுராவிலும் கார் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2.4 லட்சம் கார்களாகும் என்றார் அவர்.
    நடப்பு ஆண்டில் 3 லட்சம் கார்களை விற்கும் இலக்கை அந்த நிறுவனம் நிர்ணயித்திருந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு 2,12,372 கார்கள் விற்பனையான நிலையில், 2016-ஆம் ஆண்டில் 25 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த ஆண்டில் விற்பனையான ஹோண்டா கார்களின் எண்ணிக்கை 1,58,658 ஆகும். நாட்டில் கார் விற்பனையில் நான்காம் இடத்திலிருந்த அந்த நிறுவனம், தற்போது 7-ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளது. இந்த நிலையில் புதிய ஆலைக்கான திட்டத்தை தள்ளிப் போடாமல், நிலத்தைக் கையகப்படுத்தியதாக ஹோண்டா அறிவித்திருக்கிறது.
    குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு 80 கி.மீ. தொலைவில் உள்ள விட்டலபூரில் ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனப் பிரிவான ஹோண்டா மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆலை அமைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய இரு சக்கர ஆலையான அங்கு, ஆண்டுக்கு 12 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai