Enable Javscript for better performance
துபை உணவுத் திருவிழாவில் 64 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    துபை உணவுத் திருவிழாவில் 64 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 25th February 2017 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gulfood

    துபையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 26) தொடங்கவுள்ள உணவுத் திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த 64 உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
    இதுகுறித்து, துபையிலுள்ள இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
    துபையில் "வளைகுடா உணவுத் திருவிழா 2017' ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
    இந்திய அரசின் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இந்தியாவைச் சேர்ந்த 64 ஏற்றுமதி நிறுவனங்கள் உணவுத் திருவிழாவில் பங்கேற்கின்றன.
    உலக அளவில், அதிக அளவிலான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்தியாவிலிருந்து 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விவசாயப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    கடந்த 2015-16 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதியான வேளாண் பொருள்களின் மதிப்பு சுமார் 1600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 1 லட்சம் கோடி) ஆகும்.
    மேலும், பிரபல சர்வதேச உணவுப் பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைத்து உள்நாட்டில் விற்பனை செய்வதுடன், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.
    இந்தியாவிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பாஸ்மதி அரிசி, பிற அரிசி ரகங்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருள், பானங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை பெருமளவில் ஏற்றுமதியாகின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai