Enable Javscript for better performance
பங்குச் சந்தையில் 5-ஆவது வாரமாக முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    
    sense

    மும்பை பங்குச் சந்தையில் ஐந்தாவது வாரமாக முன்னேற்றம் காணப்பட்டு சென்செக்ஸ் 424 புள்ளிகள் அதிகரித்தது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டங்கள் அறிவிப்பு, டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனம் ரூ. 16,000 கோடி மதிப்பில் சந்தையிலிருந்து பங்குகளைத் திரும்ப வாங்கும் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் முதலீட்டாளர்களை உத்ஸாஹம் அடையச் செய்தது. குறிப்பாக, டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனத்தின் அறிவிப்பு, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகளுக்கும் கூடுதல் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
    கடந்த வார வர்த்தகத்தில் தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த பங்குகளுக்கும் சந்தையில் வரவேற்பு காணப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ கட்டணத் திட்டங்களின் விவரம் குறித்த அறிவிப்பு வெளியானது. மேலும், வாடிக்கையாளர் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டதாக முகேஷ் அம்பானி அறிவித்தார். இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 11.05 சதவீதம் அதிகரித்தது. பிரிட்டனின் வோடஃபோன் நிறுவனத்தின் இந்திய பிரிவும் ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணைவது தொடர்பான செய்தி உறுதியானது இதற்கு காரணம். இணைப்பு விவரங்கள் பற்றி இரு நிறுவனங்களுமே எதுவும் கூறாதபோதிலும், அடுத்த ஒரு மாதத்துக்குள் இணைப்பு உடன்படிக்கை குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என்று கடந்த வாரம் தெரிய வந்தது.
    இதைத் தவிர, டெலிநார் நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்தி ஏர்டெல் நிறுவனம் கையகப்படுத்தவுள்ளது என்ற தகவலும் முதலீட்டாளர்களை ஈர்த்தது.
    சீனாவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு பொருள்களுக்கு இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்கப்படுவது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து உலோக நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். அத்துறையைச் சேர்ந்த பங்குகளின் விலை சராசரியாக 2.25 சதவீதம் அதிகரித்தது.
    எண்ணெய்-எரிவாயு, உலோகம், நுகர்வோர் பொருள், புதிய பங்கு வெளியீடுகள், வங்கி, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், பொறியியல், பொதுத்துறை, ஆட்டோ மொபைல், மூலப் பொருள், மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகள் லாபம் ஈட்டின. மின் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் கூடுதல் விற்பனைக்கு வந்ததால், அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டது.
    வாரத் தொடக்கத்தில் 28,481 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், அதிகபட்ச நிலையாக 29,065 என்ற நிலையைத் தொட்டது. வார இறுதியில் 424 புள்ளிகள் அதிகரிப்புடன் 28,892 புள்ளிகளாக நிலைத்தது. இது 1.5 சதவீத அதிகரிப்பாகும். கடந்த நான்கு வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 1,858 புள்ளிகள் உயர்வு பெற்றது.
    செபி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் கடந்த வாரம் நிகர அளவில் ரூ. 1,309.70 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தன. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ. 12,782.15 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

    தேசிய பங்குச் சந்தை

    தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 117 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 8,939 புள்ளிகளாக நிலைத்தது. இது 1.34 சதவீத வளர்ச்சியாகும். கடந்த வாரம் தேசிய பங்குச் சந்தையில் ரூ. 1,01,538.62 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai