Enable Javscript for better performance
திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை: திணறும் உற்பத்தித் துறை- Dinamani

சுடச்சுட

  

  திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை: திணறும் உற்பத்தித் துறை

  By -க. தங்கராஜா  |   Published on : 27th February 2017 05:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  weavi

   

  வேலையில்லாத் திண்டாட்டம் என்ற நிலை மாறி, திறமையான வேலையாள்கள் இல்லாததால் உற்பத்தித் தொழில் துறை திண்டாட்டம் என்று கூறும் அளவுக்கு கோவையில் திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
  ஒருகாலத்தில், பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருந்தால் போதும், கோவைக்கோ திருப்பூருக்கோ சென்றால் ஏதாவது வேலை தேடி பிழைத்துக் கொள்ள முடியும் என்பதுதான் ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெற்றோர்களின் மனநிலையாக இருந்தது.
  ஆனால், நிச்சயமான வேலைவாய்ப்பு, அதிகபட்ச ஊதியம், தங்கும் வசதி, உணவு, வார விடுமுறை என கேட்கும் எந்த சலுகையைக் கொடுத்தாலும் வேலைக்குப் போதிய திறனுள்ள பணியாளர்கள் கிடைப்பதில்லை என்கின்றனர் கோவை, திருப்பூர் தொழில் முனைவோர்கள்.
  இந்த இரு மாவட்டங்களிலும் கோலோச்சி வந்த தொழில்கள், திறனுள்ள பணியாளர் பற்றாக்குறையினாலேயே தற்போது அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
  ஜவுளித் துறையில் நாட்டிலேயே முன்னணியில் உள்ள கோவை மண்டலத்தில் நிரந்தர தொழிலாளர்கள், திறனுள்ள தொழிலாளர்கள் என்ற நிலைமை மாறி ஆண்டுகள் பலவாகின்றன. அதேபோல முழுக்க உள்ளூர் தொழிலாளர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டு வந்த ஆலைகள், தற்போது ஏறத்தாழ முழுவதுமே வட மாநிலத் தொழிலாளர்களால் மட்டும் செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
  கோவை மண்டலத்தில் ஜவுளித் தொழில் இன்று வரை நிலைத்திருப்பதற்கு வட மாநிலத் தொழிலாளர்களே முக்கிய காரணம் என்கிறார் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர் எஸ்.கே.ரங்கராஜன்.
  திறனுள்ள தொழிலாளர்கள் என்ற வார்த்தையை ஜவுளித் தொழில் துறையினர் மறந்து நாள்கள் பலவாயிற்று. நூற்பாலைகளில் ஒரு தொழிலாளர் அதிகபட்சம் 5 பக்கம் இயந்திரங்களை கவனித்துக் கொண்ட காலம் போய், தற்போது ஒருவரை இருபக்கம் பார்ப்பதே பெரியதாக உள்ளது.
  உள்ளூர் தொழிலாளர்கள் தற்போது இந்தத் தொழிலுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் இரவுப் பணி பார்ப்பதில்லை. இதனால் வட மாநிலத் தொழிலாளர்களை நம்பியே ஆலைகள் இயங்குகின்றன. அவர்களுக்குப் போதுமான திறன் இருப்பதில்லை.
  இயந்திரங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மட்டுமே பல மாதங்களுக்கு வழங்குகிறோம். பின்னர், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிற்சியாளர்களை வரவழைத்து அந்தத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி வழங்கச் செய்கிறோம்.
  கேட்கும் அளவுக்கு ஊதியம், தங்கும் இடம், உணவு, ஊருக்குச் சென்று வர பணம் என்று பல திட்டங்களை செயல்படுத்தினாலும் பலன் கிடைப்பதில்லை. வெகு விரைவில் நூற்பாலைகள் எல்லாம் 3 ஷிப்ட் என்பது மாறி, என்ஜினீயரிங் தொழிற்சாலைகளைப் போன்று பகல் நேரத்தில் ஒரு ஷிப்ட் மட்டுமே செயல்படக் கூடிய நிலை வரலாம்.
  தொழிற்சாலைகளை இயந்திரமயமாக்குவதுதான் தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். ஆனால், இயந்திர மயமாக்குவதற்குப் பல நூறு கோடி ரூபாய் தேவைப்படும். இங்குள்ள ஆலைகளால் அது தற்போதைக்கு சாத்தியமில்லை.
  ஜவுளித் துறையில் "ஏ, பி, சி' என்று என்று ஆமதாபாத், பம்பாய், கோவையை அழைப்பாளர்கள். இதேபோன்ற பிரச்னையால்தான் ஏ, பி நகரங்களில் இந்தத் தொழில் நலிவடைந்தது. தற்போது அது கோவையையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார் ரங்கராஜன்.

  வாய்ப்புகள் பறிபோகும்

  ஜவுளித் துறையில் தேவையான பணியாளர்களுக்கும், கிடைக்கும் பணியாளர்களுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகமாகிவிட்டதாகக் கூறுகிறார் கோவை சர்தார் வல்லபபாய் படேல் ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ்குமார்.
  ஜவுளி நிறுவனங்கள் தற்போது திறனற்ற பணியாளர்களுக்கு திறனுள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கி வருகின்றன. அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிப்பதன் மூலம் திறனுள்ளவர்களாக மாற்ற முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகள்தான் குறைவாக உள்ளன.
  வரும் 2020-களில் ஜவுளித் தொழிலில் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதி 3 மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  ஆனால், அதற்குள் தேவையான ஊழியர்களைக் கண்டறிவது, அவர்களின் திறனை மேம்படுத்திக் கொள்வது போன்றவற்றை உடனடியாகச் செய்ய வேண்டும். சர்தார் வல்லபபாய் படேல் ஜவுளி மேலாண்மை நிறுவனத்தில் விரைவில் 15 புதிய ஜவுளி ஆய்வகங்களை அமைத்து திறனுள்ள ஜவுளித் துறை பணியாளர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். திறனுள்ள பணியாளர்களை உருவாக்கத் தாமதம் செய்ய நேரிட்டால் போட்டி நாடுகளான சீனா, வியத்நாம், வங்கதேசம் போன்ற நாடுகள் நமது வாய்ப்புகளை தட்டிப் பறித்துவிடும் அபாயம் உள்ளது என்கிறார் ரமேஷ்குமார்.


  தொழில் திறன் மேம்பாட்டு மையங்களின் பங்களிப்பு


  நாட்டின் தற்போதைய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குள்பட்டவர்கள். வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் பணிபுரியும் வயது கொண்டவர்களில் 5-இல் ஒருவர் இந்தியராக இருப்பார் என்கிறது புள்ளிவிவரம்.
  ஆனால், நாட்டில் தொழில்கல்வி முடித்துவிட்டு வெளியே வரும் மாணவர்கள், தகுதியைக் கொண்டிருக்கிறார்களே தவிர, அந்த பணிக்கான திறனை கொண்டிருப்பதில்லை என்பதுதான் தொழில் நிறுவனங்களின் பெரும் கவலை.
  பெருகி வரும் மக்கள் தொகைக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தையும், வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை பெருகுவது நாட்டின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்காது என்பதையும் உணர்ந்த மத்திய அரசு, தொழில் திறன் மேம்பாட்டுக்காகவே புதிய அமைச்சகத்தை உருவாக்கி, அடுத்த 7 ஆண்டுகளில் சுமார் 40 கோடி இளைஞர்களுக்கு தொழில் திறன் வழங்குவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நாடெங்கும் 500 திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு இலவசமாக திறன் பயிற்சி அளிப்பது, இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் 50 அன்னிய வேலைவாய்ப்பு திறன் பயிற்சி மையங்களை அமைப்பது, இந்தியா ஸ்கில்ஸ் என்ற தேசிய திறன் போட்டி நடத்தி இளைஞர்களின் திறன்களை அங்கீகரிப்பது.
  ஐ.டி.ஐ.க்களின் ஏற்புத்திறனை 18.50 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக விரிவுபடுத்துவது, மேலும் 5000 புதிய ஐ. டி. ஐ.க்கள் உருவாக்குவது என்று திட்டங்கள் ஏராளமான அளவில் செயல்படுத்தப்படுகின்றன.
  பஞ்சாலைகளில் அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைப்பதால் நிறுவனத்துக்கு செலவுகள் குறையலாம். ஆனால், உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை பெருகி வரும் தற்போதைய நிலையில், சேவைத் துறையில் பணியாற்றுவதை கெளரவமாகவும், உற்பத்தித் துறைகளில் பணியாற்றுவதை கெளரவக் குறைச்சலாகவும் பார்க்கும் மனப்பாங்கு அதிகரித்து வருகிறது என்கிறார் இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பிரபு தாமோதரன்.
  மேலும், ஆண்டுதோறும் 20 முதல் 25 சதவீதம் பேர் வரை தொழிலுக்குப் புதிதாக வந்து கொண்டும், விலகிக் கொண்டுமே இருக்கிறார்கள். ஏதாவது ஒரு இல்ல விழா அல்லது திருவிழாவுக்காக 20 தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள் என்றால் அவர்களில் 10 பேர் மீண்டும் பணிக்குத் திரும்பி வந்தாலே அதிகம். சேவைத் துறையில் ஏ.சி. பணிச் சூழலில் வேலை செய்யவே தொழிலாளர்கள் விரும்புகின்றனர். செல்லிடப்பேசி, கணினி தொடர்பான வேலைகள், ஹோட்டல், உணவகம் தொடர்பான வேலைகள் எளிதாக இருப்பதால் அவற்றையே அதிகம் விரும்புகின்றனர்.
  ஜவுளித் துறையில் தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்வதே மனித வள மேம்பாட்டு அதிகாரிகளுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதனால் அரசின் திட்டங்களாலும் கூட, திறன் வாய்ந்த பணியாளர்களின் பற்றாக்குறை என்ற பிரச்னை பூதாகரமாக வளர்ந்து வருவதை தடுக்க முடியவில்லை என்கிறார் அவர்.


  என்ஜினீயரிங் துறையும் விதிவிலக்கல்ல

  திறனுள்ள தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை ஜவுளித் துறையில் மட்டுமல்ல மோட்டார், பம்ப்செட், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு என ஒட்டுமொத்த என்ஜினீயரிங் உற்பத்தித் துறையிலும் உள்ளது என்கிறார் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கே.கே.ராஜன்.
  உள்ளூர் இளைஞர்கள், மாணவர்கள் பலரும் தகவல் தொழில்நுட்பத் துறையையே விரும்புகின்றனர். அவர்கள் தங்களது கைகளும், சட்டையும் அழுக்காகாமல் பணியாற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். திறனுள்ள தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதால் நாங்களே ஐ.டி.ஐ. அமைத்து, உதவித் தொகை வழங்கி பழகுநர் பயிற்சிக்கு வரும்படி கூறுகிறோம். ஆனால், 30 ஆசிரியர்கள் உள்ள கல்வி நிறுவனத்தில் 15 மாணவர்கள் கூட சேருவதில்லை.
  படிப்பை பாதியில் கைவிட்டவர்கள், 10-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களை வீடு தேடிச் சென்றும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அடையாளம் கண்டும் அவர்களின் பெற்றோரிடம் பேசினால் கூட, மாணவர்களைப் போன்றே பெற்றோரும் தங்களது குழந்தைகளை என்ஜினீயரிங் உற்பத்தித் துறைகளில் பணிக்கு அனுப்ப விரும்புவதில்லை.
  வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கோவையில் அதிக ஊதியம் கிடைப்பதால் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். அவர்கள் உடல் உழைப்பு பணிக்கும் தயாராக இருக்கின்றனர். ஆனால், போதுமான திறனுடன் அவர்கள் இருப்பதில்லை.
  மேலும், நிரந்தரமாகவும் இருப்பதில்லை என்பதால் தொழில் நிறுவனங்களால் திட்டமிட்டு உற்பத்தியில் ஈடுபட முடியாத சூழல் உருவாகிறது. ஐ.டி. துறை மீதான கவர்ச்சி நீடிக்கும் வரையிலும் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai