கார் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி தனது தயாரிப்புகளின் விலையை ரூ.6,100 வரை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மூலப் பொருள்கள்-விநியோகச் செலவு அதிகரிப்பு, அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எதிர்மறையான பாதிப்பு ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் மாருதி சுஸுகியின் அனைத்து மாடல் கார்களின் விலையும் ரூ.6,100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வியாழக்கிழமை (ஆக.16) அமலுக்கு வந்துள்ளது என்று மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் குறைந்த விலை ஆல்டோ 800 முதல் நடுத்தர வகை சியாஸ் வரை பல்வேறு மாடல்களில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போதைய விலை உயர்வுக்கு முன்பாக அவற்றின் விலை ரூ.2.51 லட்சம் முதல் ரூ.11.51 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையை 4 சதவீதம் வரை அதிகரிக்கப் போவதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
இடுபொருள் செலவினம் அதிகரிப்பால், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்புகளின் விலையை இம்மாதம் முதல் அதிகரிப்பதாக ஏற்கெனவே அறிவித்து விட்டன.
சுங்க வரி உயர்வால் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான ஆடி, ஜேஎல்ஆர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் கார்கள் விலையை நடப்பாண்டு ஏப்ரலில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உயர்த்தியது நினைவுகூரத்தக்கது.