உள்நாட்டில் யூரியா உற்பத்தி 1.6 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உரத் துறை அமைச்சகத்தின் உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:
உள்நாட்டில் யூரியா உற்பத்தி கடந்த 2017-18 நிதி ஆண்டில் 2.40 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சில ஆலைகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், நடப்பாண்டில் அனைத்து ஆலைகளின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் யூரியா உற்பத்தி 2.44 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 1.6 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் ஆண்டுக்கு 3 கோடி டன் யூரியா தேவை என்ற நிலையில் அதற்கான பற்றாக்குறை நடப்பாண்டிலும் ஏற்படும். எனவே, தேவையை ஈடு செய்ய 50-60 லட்சம் டன் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றார் அவர்.